

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இனிமேல் இயங்காது என்ற பொய்ப் பிரச்சாரத்தை விவசாயிகள் நம்ப வேண்டாம் என ஆலையின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார்.
ஆலை வளாகத்தில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்திற்கு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.மேலாண்மை இயக்குநர் செந்தில்குமாரி முன்னிலை வகித்தார் அலுவலக மேலாளர் பாலன் வரவேற்றார்.
உறுப்பினர்கள் . பழனிச்சாமி. நல்ல மணிகாந்தி, அப்பாஸ்,ராமச்சநதிரன், மொக்க மாயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அலுவலக எழுத்தர் அய்யம்பெருமாள் நன்றி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2019 - 20ஆம் ஆண்டிற்கான அரவை கரும்பு பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டது.
மேலும் ஆலை பணியாளர்கள் மற்றும் கரும்பு அரவை செய்த விவசாயிகளுக்கு நிலுவை பாக்கி தொகையும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தென் மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரையின் நிதிநிலைமை அரசின் பாராமுகத்தால் அதல பாதாளத்திற்கு சென்றது.
மேலும் இந்த ஆலைக்கு கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேலாண்மை இயக்குநர் பலர் நிரந்தரமாக பொறுப்பு வகிக்கவில்லை.வந்த வேகத்தில் சென்ற அதிகாரிகளால் ஆலையின் கரும்பு கோட்ட பகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து கரும்பு உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது இந்த ஆலை மேலாண்மை இயக்குநராக மதுரை கோட்டாச்சியராக இருந்த செந்தில்குமாரி சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு ஆலை நிாவாகத்திற்கு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயிகளை சந்தித்து கரும்பு உற்பத்தியை பெறுக்க நடவடிக்கை எடுக்காமல் பொழுதைக் கழித்த அதிகாரிகள் பலர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஆலை மேலாண்மை இயக்குநர் செந்தில்குமாரி இது குறித்து கூறியதாவது:
ஆலை நிர்வாகம் சார்பில் அரவை கோட்டப் பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் வசிக்கும் கிராமத்திற்கு நேரில் சென்று கரும்பு விவசாயத்தை கைவிடாமல் கரும்பு பயிர் செய்ய தேவையான சொட்டு நீர் பாசனம், வங்கிக் கடன் உதவி . கரும்பு வெட்டத் தேவையான பணியாட்கள் ஏற்பாடு, வெட்டிய கரும்பை எடுத்துச் செல்ல வாகன வசதி, அரவை செய்த கரும்புக்கு 15 நாட்களுகுள் பணப் பட்டுவாடா செய்து தருவது குறித்தும் கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 58 ஆயிரம் கடன் உதவி தேசிய வங்கி மூலம் பெற்றுத் தர ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று விவசாயிகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கப்பட்டது.
வரும் அரவை பருவத்திற்குத் தேவையான கரும்புகளை பதிவு செய்து 2020 மற்றும் 21-ம் ஆண்டிற்கான அரவை தொடங்கப்படும். வரும் அரவைப் பருவத்திறகு 2000 டன் கரும்பு தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கரும்பு பதிவு செய்ய கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த ஆலை இனிமேல் இயங்காது என்ற பொய் பிரச்சாரத்தை விவசாயிகள் நம்ப வேண்டாம்.
இந்த ஆலை, விவசாயிகளின் கூட்டு முயற்சி மற்றும் பங்கு தொகையால் உருவாக்கப்பட்டது அரசியல் காரணங்களுக்காக எந்த நிலையிலும் தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சி பலிக்காது என்று கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகள் ஆலை நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆதங்கத்துடன் பேசினார்.