

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வைப்பார் கிராமம் சர்வே நம்பர் 989-ல் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள உப்பளங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களை தமிழக அரசு சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிலங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் உப்பளங்கள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், அந்த நிலத்தில் உப்பளம் அமைத்து 2019-ம் ஆண்டு வரை ரசீது செலுத்தி வந்த வைப்பார் கிராமம் அருகே துலுக்கன்குளம் கிராமத்தின் 110 குடும்பத்தை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர்.
3 தலைமுறைகளாக உப்பளம் அமைத்து தொழில் செய்து வரும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும், அடுத்த வேளை உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்படும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருப்பதால் அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிலங்களை கையகப்படுத்தும் பணி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் மேற்பார்வையில் நடந்தது.
இதற்கிடையே, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை போலீஸார் செய்தி சேகரிக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.