கரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்; கைது நடவடிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

கரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்; கைது நடவடிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பாக மத ரீதியான பொய்யான தகவல்களை இணையதளங்களில் வெளியிடுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவில் நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் காவல்துறை நேற்று பதில் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பாக மத ரீதியான பொய்யான தகவல்களை இணையதளங்களில் வெளியிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக டிஜிபி சார்பில் நேற்று பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''கரோனா வைரஸ் தொற்றுடன் மதத்தைச் சம்பந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் வெளியிட்டதாக, சென்னையில் 8 பேர் மீது 8 வழக்குகளும், மதுரையில் 167 பேர் மீது 19 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. இவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், 356 பேர் மீது 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பதில் மனுவுக்குப் பதிலளிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, விசாரணையை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in