Published : 08 Jul 2020 07:59 AM
Last Updated : 08 Jul 2020 07:59 AM

விளைநிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு: விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்

விளைநிலங்கள் வழியாக குழாய் பதித்து எண்ணெய் எடுத்துச் செல்லும் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோயில் அருகேயுள்ள கருங்காளிபாளையம் பகுதிகளில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.

பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஐடிபிஎல் என்கிற திட்டத்திற்காக கோவை மாவட்டம் இருகூரில் இருந்து ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக 317 கிலோ மீட்டர் தூரம் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதித்து எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரம் நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோயில் அருகேயுள்ள கருங்காளிபாளையம் கிராமத்தில் நேற்று விளை நிலத்துக்குள் கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில், சென்னிமலை அருகேயுள்ள பசுவப்பட்டி பூச்சக்கட்டு வலசுப் பகுதியிலுள்ள விவசாய விளைநிலத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, திட்டத்திற்காக விவசாய விளைநிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும், விளைநிலங்களில் குழாய்களைப் பதிக்காமல் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x