Published : 08 Jul 2020 07:58 AM
Last Updated : 08 Jul 2020 07:58 AM

சரக்கு வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தால் ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தால் ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கொளத்தூரைச் சேர்ந்த முருகன் வெங்கடாசலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் தொடர் ஊரடங்கால் கனரக லாரி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சரக்கு வாகனங்களும் இயங்கவில்லை. இதனால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனரக லாரி மற்றும் சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரியை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கனரக போக்குவரத்து சரக்கு வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் வரும் செப்டம்பர் வரை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தால் அரசுக்கு ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஊரடங்கு காலகட்டத்தில் கனரக சரக்கு போக்குவரத்து வாகனங்கள் இயங்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்காதபோது வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கோர முடியாது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின்படி தகுதிச்சான்று, பதிவுச்சான்று, பெர்மிட் போன்ற ஆவணங்களை புதுப்பிப்பதற்கான காலக் கெடுவை மத்திய அரசு செப்.30 வரை நீட்டித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x