

தமிழகம், கேரளாவில் 16 தேயிலை கழிவு உர நிறுவனங்கள், இரு தேயிலை தொழிற்சாலை என 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜி தெரிவித்தார்.
தரம் குறைந்த, கலப்படமான தேயிலையால், தென்னிந்திய தேயிலையின் தரம் குறைந்து, விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதையடுத்து, தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தாவர உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 22 தொழிற்சாலைகளின் முறையற்ற நடவடிக்கைகளுக்கான விளக்கம் கேட்கப்பட்டது.
தொழிற்சாலைகளின் விளக்கத்தை பரிசீலித்த பின்னர், 18 உயிர் உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் இரு உடனடி தேயிலை தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜி கூறும்போது, “தேயிலையில் கலப்படத்தை தடுக்க தமிழகம், கேரளாவில் கடந்த 6 மாதங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தேயிலைக் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் 22 நிறுவனங்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் பெறப்பட்ட தகவல்களில், உரிய தகவல் இல்லாததும், சரிவர கணக்கு பராமரிக்காததும் கண்டறியப்பட்டு, 16 உர யூனிட்கள் மற்றும் நீலகிரி மாவட்டம் கேத்தியில் உரிமம் பெறாத தேயிலைத் தூள் தயாரித்த தொழிற்சாலை, தேனி மாவட்டத்தில் கணக்கு பராமரிக்காத தொழிற்சாலை என மொத்தம் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.