

அரியலூரில் ரூ.347 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்துக்கு காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் நிதியுடன் கடந்தாண்டு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க ஒப்பு தல் பெறப்பட்டது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம் அரியலூர் தெற்கு கிராமத்தில் 27 ஏக்கர் பரப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவ, ரூ.347 கோடி அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக தமிழக அரசால் ரூ.100 கோடியும், மத்திய அரசால் ரூ.50 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. இம் மருத்துவக் கல்லூரி 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் நிறுவப்படுகிறது.
மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.89 கோடியே 75 லட்சம் மதிப்பில் மருத்துவக் கருவிகளை மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அரசு கொறடா ராஜேந்திரன், தலைமைச் செயலர் கே.சண்முகம், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையொட்டி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் ஆட்சியர் த.ரத்னா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.