

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள பருத்தி ஏல மையத்தில், 39 ஊராட்சிகளைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், கடந்த 5-ம் தேதி முதலே 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி ஏற்றப்பட்ட வாகனங்களுடன் வந்து, திருமருகல் பிரதான சாலையில் காத்திருந்தனர். ஆனால், அன்று பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று மிக தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இதுகுறித்து சீயாத்தமங்கை விவசாயி கலியமூர்த்தி கூறியபோது, “ஜூலை 6-ம் தேதி எந்தவித முன்னறிவிப்புமின்றி பருத்தி ஏலத்தை திடீரென ரத்து செய்ததால், 3 நாட்களாக பருத்தியுடன் வாகனத்திலேயே காத்திருக்கிறோம். இதனால், வாகனத்துக்கு நாளொன்றுக்கு ரூ.2,000 வீதம் ரூ.6,000 வாடகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
இதுகுறித்து விற்பனைக் கூட அதிகாரிகள் தரப்பில் கூறியபோது, “ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பருத்தி ஏலம் தாமதமாக தொடங்கி, மெதுவாக நடைபெற்று வருகிறது” என்றனர்.