

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 1,233 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம், ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட உயர் அலுவலர்களிடம் கேட்டபோது, “சென்னையில் இருந்து ஊர் திரும்பியவர்கள் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளில் அதிகமாக உள்ளனர். அந்த நகராட்சிகளை மட்டும் தனிமைப்படுத்தலாமா? அல்லது இரு நகராட்சிகளிலும் முழு ஊடரங்கு கொண்டு வந்து, அங்கிருந்து யாரும் வெளியே வராதபடி செய்யலாமா என ஆலோசிக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.