

ஊரடங்கு காலத்தில் 80 வயது மூதாட்டி ஐதராபாத் செல்ல விமான நிலையம் அழைத்துச் சென்ற பெண் காவலரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சென்னை மாம்பலம் காவல் நிலையத்துக்கு கடந்த மாதம் 29-ம்தேதி தொலைபேசி அழைப்பு ஒன்றுவந்தது. எதிர்முனையில் பேசிய பெண், தான் ஐதராபாத்தில் வசிப்பதாகவும், தனது தாய் வசந்தா (80) தியாகராய நகர், நீலகண்ட மேத்தா தெருவில் தற்போது தனியாக வசித்து வருவதாகவும், இ-பாஸ், விமான டிக்கெட் பெற்றுள்ள நிலையில் தனது தாயை சென்னை விமான நிலையம் வரை அழைத்து வந்து விமானத்தில் ஏற்றிவிடுமாறும் உதவி கோரியிருந்தார்.
இதையடுத்து மாம்பலம் காவல்நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை பெண் காவலர் ஆர்.மகாலட்சுமி கடந்த1-ம் தேதி வசந்தாவின் வீட்டுக்குச் சென்று, அவரை தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்த கார் மூலம் விமான நிலையம் அழைத்து வந்து விமானத்தில் அனுப்பி வைத்தார். நல்லபடியாக அவரும் ஐதராபாத் சென்றடைந்தார்.
இந்நிலையில், தக்க சமயத்தில் மூதாட்டியை அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றிவிட்ட முதல்நிலை பெண் காவலர் மகாலட்சுமியை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி அளித்தார்.