Published : 07 Jul 2020 10:43 PM
Last Updated : 07 Jul 2020 10:43 PM

தமிழகத்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா? மீண்டும் முழு ஊரடங்கு வருமா?- முதல்வர் பழனிசாமி பதில்

சென்னை

தமிழகத்தில் சமூகப் பரவல் அதிகரித்துள்ளதா? முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த வாய்ப்புள்ளதா? ஸ்டாலின் கூறியபடி ரூ.5000 நிவாரணம் வழங்க மறுப்பது ஏன்? போன்ற கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட்டில் கட்டப்பட்டுள்ள அதி நவீன கோவிட் மருத்துவமனையைத் திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில் நோய்த் தொற்று சற்று குறைந்தாலும் கூட, மற்ற மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாவது போல் தோன்றுகிறதே?

இது உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற நோய். 210 நாடுகளில் இந்த நோய் பரவியிருக்கிறது. நோய்ப் பரவலைத் தடுக்க நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள்தான் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மக்களுடைய முழு ஒத்துழைப்பினால்தான் கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை எந்த அளவிற்கு பின்பற்றுகிறார்களோ அந்த அளவுக்கு இந்த நோய்ப் பரவலைக் குறைக்க முடியும்.

சமூகப் பரவல் வந்துவிட்டதா?

நான் ஏற்கெனவே பலமுறை சமூகப் பரவல் இல்லை என்று தெரிவித்துவிட்டேன். நாமெல்லாம் இப்படி இருக்கின்ற இடத்தில் நோய் பரவினால்தான் சமூகப் பரவல். ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்குத் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து அவர்களுக்கு பாசிட்டிவ் இருந்தால் சிகிச்சை அளிக்கிறோம். அந்த முறையைத் தான் அரசு கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது.

அரசின் சார்பாக பல காய்ச்சல் முகாம்களை நடத்தியிருக்கிறோம். அதில், அதிக அளவு மக்களைப் பரிசோதனை செய்த காரணத்தினால், சுமார் 10,000 நபர்களுக்கு நோய்த் தொற்றின் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.

பின்னர் பரிசோதனை செய்து பாசிட்டிவ் அல்லது நெகடிவ் என்பது கண்டறியப்படும். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழக அரசு, சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து செயல்பட்டதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. நோய்ப் பரவல் குறைக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட வாரியாக நோய்த்தொற்று குறித்து வெளியிடுவதில்லையே?

மாவட்ட வாரியாக வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். தினமும் சுகாதாரத் துறையின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் விவரம், தொற்று ஏற்பட்டவர்களுடைய விவரம், இறந்தவர்களின் விவரம் ஆகியவை வெளியிடப்பட்டு வருகிறது.

ஊரடங்கு பலனளித்தும், சென்னையில் ஏன் ஊரடங்கு நீட்டிக்கப்படவில்லை?

வாழ்வாதாரம் என்பது மிகப் பெரிய சவால். ஒரு பக்கம் நோய்ப்பரவலைத் தடுக்க வேண்டும், அதே வேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்குக் கொடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை. கிட்டதட்ட 105 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதையே தொடர்ந்து கொண்டிருந்தால், வாழ்வாதாரத்தில் பாதிப்பு மற்றும் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுவிடும். ஆகவேதான், முடிந்த அளவிற்கு ஊரடங்கின் மூலமாக நோய்ப் பரவலைத் தடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நிலையில்தான் அரசாங்கம் இந்த முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கின்றது.

இந்த ஊரடங்கின் மூலமாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் இன்றைக்கு சென்னை மாநகர மக்களும், மதுரை மாநகர மக்களும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு, ஊரடங்கு காலத்தில் முழு ஒத்துழைப்பு நல்கியதற்கு அனைத்து மக்களுக்கும் மனமார, உளமார பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு உண்டா?

அப்படி வருவதற்கு வாய்ப்பில்லை என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், இது முழுக்க முழுக்க மக்களுடைய கையில்தான் இருக்கிறது. மக்கள் அரசினுடைய வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தால், இந்தப் பரவல் நிச்சயமாகக் குறையும்.

அரசு ஏற்கெனவே, ஊடகம் மற்றும் பத்திரிகைகள் மூலமாக, பேட்டிகள் மூலமாக, தெருத் தெருவாக ஒலிப்பெருக்கியின் மூலமாக, துண்டுப் பிரசுரங்கள் மூலமாக இந்த நோய் எப்படி வருகிறது? இந்த நோயைத் தடுப்பதற்கு என்ன வழி போன்ற விவரங்களை உள்ளடக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். மக்கள் விழிப்போடு இருந்தால், அரசின் வழிமுறைகளைப் பின்பற்றினால் இந்த நோய்ப் பரவல் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

நான் ஏற்கெனவே கூறியதைப் போல பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், பொருட்களை வாங்குகின்றபோது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவ வேண்டும், வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கழிப்பறைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

தெருக்களில் இருக்கும் பொதுக் கழிப்பறைகளை அரசால் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், மாநகராட்சிப் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகமாக வாழ்கின்ற தெருக்களிலும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக அரசால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுடைய முழு ஒத்துழைப்பு மிக மிக முக்கியம். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பொதுமக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் இதர பொருட்கள் கொடுக்கும் என்று அரசு அறிவித்தது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டுமென்று ஸ்டாலின் குறிப்பிடுவது குறித்து?

அவருடைய ஆட்சிக் காலத்தில் புயல், வெள்ளம் வந்தது. எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்று எண்ணிப் பாருங்கள். அரசாங்கத்தின் நிதிநிலைக்கு ஏற்றவாறு, இன்றைக்கு அரசு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தேவையான பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம். மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், ஏழை எளிய மக்களுக்கு அரசின் மூலமாக பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இன்றைக்கு விலையில்லா அரிசி கொடுக்கின்றோம்.

மத்திய அரசாங்கமும் கொடுக்கிறது. அதேபோல விலையில்லா சர்க்கரை, பருப்பு, எண்ணெய் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். அதேபோல, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அதேபோல விலையில்லா அரிசி, எண்ணெய், பருப்பு கொடுத்தோம். எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் கொடுத்தோம்.

மீண்டும் சென்னையிலும், மதுரையிலும் முழு ஊரடங்கு பிறப்பித்தவுடன் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் அரசு வழங்கியது. குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றவர்கள், சாதாரண மக்கள், கரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சை பெறுகின்ற காலத்திலே ஒரு வாரம் தங்கியிருந்தால் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பும் நாங்கள் கொடுத்திருக்கின்றோம்.

கரோனா வைரஸ் காற்றின் மூலமாக பரவுகிறதா?

இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. தற்போது உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் ஆகியவை கொடுக்கின்ற வழிமுறைகளின்படி வெளியே சென்றால் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். அப்படி முகக்கவசம் அணிந்தால் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

நான் ஏற்கெனவே அறிவித்தபடி, அதை எல்லாம் கடைப்பிடித்தால் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். அதுதான் தற்போது இருக்கும் நிலை. மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, அதையும் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் வெளியிட்டால் அதையும் கடைப்பிடித்து நோய்ப் பரவலைத் தடுப்பதுதான் அரசினுடைய முதன்மையான கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, இந்த மருத்துவமனை இன்றைக்கு மிகச் சிறப்பாக கரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சை செய்யக்கூடிய அளவிற்கு உள்ளது. ஆக்சிஜன், வென்டிலெட்டர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. எந்தவிதக் காலதாமதமுமின்றி உயிரிழப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த மருத்துவமனை பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு சிறந்த மருத்துவமனையாக நாங்கள் இதைக் கருதுகிறோம்.

மக்கள் உயிர் தான் முக்கியம். அந்த உயிரைக் காப்பதற்கு அரசு முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், காவல்துறையைச் சேர்ந்த பணியாளர்கள், கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு இன்றைக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சேவை செய்யக்கூடிய அரும்பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் அரசின் சார்பாக மனமார, உளமார பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x