தூத்துக்குடியில் காவலர்களுக்கு யோகா, உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி: மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை

தூத்துக்குடியில் காவலர்களுக்கு யோகா, உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி: மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை
Updated on
1 min read

தூத்துக்குடியில் காவலர்களுக்கு யோகா பயிற்சியும், உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக முக்கியமானதாகும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளில் யோகா பயிற்சியும் ஒன்றாகும். அத்துடன் மட்டுமல்லாமல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியதாகும்.

எனவே, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு யோகா பயிற்சியளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் 50 பேர் வரவழைக்கப்பட்டு இன்று காலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது.

எஸ்.பி. ஜெயக்குமார் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

இப்பயிற்சியை யோகாவில் தேர்ச்சி பெற்ற முதல்நிலைக் காவலர் ராஜலிங்கம் கற்றுக்கொடுத்தார். மேலும், 25 உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது.

இதுபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in