ஒரே நாளில் 144 பேருக்கு தொற்று; தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி: 2-வது நாளாக 100-ஐ தாண்டியது பாதிப்பு

ஒரே நாளில் 144 பேருக்கு தொற்று; தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி: 2-வது நாளாக 100-ஐ தாண்டியது பாதிப்பு
Updated on
1 min read

தூத்துக்குடியில் கரோனா தொற்றால் இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் 2-வது நாளாக இன்றும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 தாண்டி இருந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,272 ஆக இருந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் இன்றும் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க1,416- ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. நேற்று 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 144 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி குறிஞ்சிநகரில் உள்ள தனியார் வங்கிக் கிளை ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த வங்கி மூடப்பட்டது. அதுபோல அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள டீக்கடை உரிமையாளருக்கு தொற்று உறுதியானதால், அந்த கடை மூடப்பட்டது.

இந்நிலையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த 50 வயது பெண் கடந்த 1-ம் தேதி சிறுநீரக கோளாறு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடையாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. முன்பு தினமும் 500 மாதிரிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை 1200 ஆக அதிகரித்துள்ளோம்.

தூத்துக்குடியில் 7 இடங்களிலும், கோவில்பட்டியில் 3 இடங்களிலும் கரோனா தொற்று பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in