மீண்டும் சர்ச்சையில் சாத்தான்குளம் போலீஸார்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தது குறித்து விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மீண்டும் சர்ச்சையில் சாத்தான்குளம் போலீஸார்: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்தது குறித்து விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகேந்திரன் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கணவர் உயிரிழந்துவிட்டார். மகன்கள் துரை மற்றும் மகேந்திரனுடன் வசித்து வருகிறேன். ஜெயக்குமார் என்பவர் இறந்தது தொடர்பான வழக்கில் என் மகன் துரையை விசாரிக்க சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மே 22-ல் என் வீட்டிற்கு வந்தார்.

மறுநாள் அதிகாலை 2 மணிக்கு என் சகோதரி வீட்டிற்கு ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் துரையை தேடிs சென்றனர். அங்கு துரை இல்லாததால் இளைய மகன் மகேந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 2 நாள் சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாகத் தாக்கினர்.

இதில் மகேந்திரனுக்கு தலை மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. சுயநினைவு இழந்து நிலையில் மே 24-ல் மகேந்திரனை வெளியே அனுப்பினர். வீட்டிற்கு வந்ததும் உடல் நிலை மோசடையவே மகேந்திரனை மருத்துவமனையில் சேர்த்தோம். ஜூன் 13-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக புகார் அளித்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் மகன் துரையை விடுவிக்கமாட்டோம் என போலீஸார் மிரட்டினர். இதனால் உடனடியாக புகார் அளிக்கவில்லை. இந்நிலையில் தான் சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து என் மகன் மரணத்தில் தொடர்புடைய போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன்.

இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸார் தாக்கியதால் தான் என் மகன் இறந்தார். அது குறித்து விசாரிக்கவும், எங்கள் குடும்பத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in