Published : 07 Jul 2020 07:18 PM
Last Updated : 07 Jul 2020 07:18 PM

ரூ.17,000 கோடி திட்டங்களில் முறைகேடு; சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கும் துணிச்சல் அமைச்சர் வேலுமணிக்கு இருக்கிறதா?- கே.என்.நேரு பதிலடி

கே.என்.நேரு: கோப்புப்படம்

சென்னை

17,000 கோடி ரூபாய் திட்டங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கும் துணிச்சல் அமைச்சர் வேலுமணிக்கு இருக்கிறதா? என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.என்.நேரு இன்று (ஜூலை 7) வெளியிட்ட அறிக்கை:

"கரோனாவிலும் கொள்ளையடிப்பவர் என்றால், அவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.பி.வேலுமணிதான். ஊழல் கறை படிந்த கைகளுக்குச் சொந்தமான வேலுமணிக்கு திமுக தலைவர் பற்றி விமர்சிக்க எவ்வித தகுதியும் இல்லை. திமுக தலைவரின் திசைப் பக்கம் திரும்பி நிற்கக் கூட தகுதியில்லாதவர் வேலுமணி.

நகராட்சி நிர்வாகத் தலைமைப் பொறியாளர் நியமனக் கோப்புகளையும் உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழலை எல்லாம் பொருட்படுத்தாமல் இதுவரை அவர் கையெழுத்துப் போட்ட கோப்புகளையும் சிபிஐ விசாரணைக்குக் கொடுத்துவிட்டு, எஸ்.பி.வேலுமணி, திமுக தலைவரை விமர்சித்து அறிக்கை விட்டிருக்க வேண்டும்.

நடராஜன் உயர் நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடர்ந்து விட்ட பிறகும், இன்னும் தன் முறைகேட்டை மறைக்கப் படாத பாடுபடுகிறார் வேலுமணி.

திமுக தலைவர் எழுப்பியது ஏதோ ஒரு நிர்வாக மாற்றம் குறித்து மட்டும் அல்ல. 17 ஆயிரம் கோடித் திட்டத்தினை நிறைவேற்றும் இடத்தில் ஏன் பணி நீட்டிப்புச் செய்த புகழேந்தியை அதுவும் ஏற்கெனவே இருந்த ஒரு தலைமைப் பொறியாளர் நடராஜனை மாற்றிவிட்டு நியமித்தீர்கள்?

சென்னை மாநகராட்சியில் இருந்து பொறியாளரை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நியமிக்கக் கூடாது என்று அரசு விதி இருக்கிறது. அந்த விதியை ஏன் மீறினீர்கள்?

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம்

சென்னை மாநகராட்சியில் 20 ஆம் தேதி பணி நீட்டிப்புக் கோரி மனு கொடுத்து, 21 ஆம் தேதியே மாநகராட்சி ஆணையர் பரிந்துரைத்து, 30 ஆம் தேதியே புகழேந்திக்குப் பணி நீட்டிப்பு வழங்கியது ஏன்?இப்படிப் பணி நீட்டிப்புக் கேட்ட எத்தனை பேருக்கு மின்னல் வேகத்தில் வழங்கப்பட்டுள்ளது?

பணி நீட்டிப்பு வழங்கி தலைமைப் பொறியாளர் பதவிக்குப் பதில், முதன்மை தலைமைப் பொறியாளர் பதவியாக தரம் உயர்த்தியும் கொடுத்தது ஏன்?

ஒரு பதவியில் இருப்பவர் அதே பதவியில் பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம் என்று திமுக தலைவரே சுட்டிக்காட்டி, இவருக்கு மட்டும் பதவியைத் தரம் உயர்த்திக் கொடுத்தது ஏன் என்று கேட்டார். அதற்குப் பதில் என்ன?

ஏற்கெனவே நான்கு வருடம் மாநகராட்சியில் பணி நீட்டிப்பு, பிறகு நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் மீண்டும் ஒரு வருடம் பணி நீட்டிப்பு எனப் புகழேந்திக்கு மட்டும் வழங்கியது ஏன்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாத வேலுமணி தன் மனம் போன போக்கில் பேசுவது அவருக்கு ஏதோ அவமானமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்குப் பெருத்த அவமானம்.

புகழேந்தி ஒரு 'மெக்கானிக்கல் இன்ஜினீயர்'. அவர் எப்படி சிவில் பணிகளை குறிப்பாக சீர்மிகு நகரங்கள் என்று கூறக்கூடிய 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளைக் கவனிக்க முடியும். ஸ்மார்ட் சிட்டி பணிகள் மட்டும் அல்ல, மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் நடக்கிறது. அந்தப் பணிகள் பற்றியெல்லாம் வேலுமணி ஏன் வாய் திறக்கவில்லை?

'மெக்கானிக்கல் இன்ஜினீயரு'க்கும், சிவில் இன்ஜினீயரு'க்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒருவர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருப்பது தமிழக அமைச்சரவையின் சாபக்கேடு! கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அனுமதி கூட வழங்கத் தகுதியில்லாத புகழேந்தியை மாநகராட்சியில் வைத்து 5,000 கோடி ரூபாய் திட்டங்களை நிறைவேற்றியது எப்படி? அதில் அமைச்சர் வேலுமணி செய்த ஊழல் எவ்வளவு? எத்தனை டெண்டர்கள் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்குப் போனது?

ஆன்லைன் டெண்டர் என்கிறார் அமைச்சர் வேலுமணி. அவருக்குத் தைரியம் இருந்தால், 'எந்த ஆன்லைன் டெண்டரிலும் நிபந்தனைகள் சேர்ப்பதில்லை, சான்றிதழ்கள் தரச் சொல்லி நிபந்தனை வைப்பதில்லை, தகுதியான யாரை வேண்டுமானாலும் ஆன்லைனில் டெண்டர் போட வைத்திருக்கிறோம். ஒரு ரூபாய் கூட டெண்டரில் நான் சம்பாதிக்கவில்லை. நான் டெண்டரில் தலையிடுவதே இல்லை' என்று வெளிப்படையாக அறிவித்து சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கும் துணிச்சல் அமைச்சர் வேலுமணிக்கு இருக்கிறதா?

அந்தத் துணிச்சல் இல்லையென்றால், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில் விடப்பட்ட டெண்டர்கள் பற்றி எல்லாம், குறைந்தபட்சம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க நான் தயார் என்று அறிவிக்கும் தைரியம் இருக்கிறதா?

அப்படியொரு விசாரணை ஆணையம் அமைத்து, அந்த ஆணையம் உள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடே நடக்கவில்லை என்று கூறிவிட்டால், நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். 'ஊழல் நடந்திருக்கிறது' என்று சொல்லி விட்டால், வேறு வழக்கு விசாரணை இல்லாமலேயே நான் ஜெயிலுக்குப் போகத் தயார் என்று வேலுமணி அறிவிக்கத் தயாரா?"

இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x