

சென்னையில் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 35% ஆக இருந்த நிலையில், இன்று படிப்படியாகக் குறைந்து 16% ஆக உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று (07.07.2020) உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தேனாம்பேட்டை மண்டலப் பகுதிகளில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை நேரில் ஆய்வு செய்தும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ஒவ்வொரு நாளும் கரோனா தொற்றுத் தடுப்பு நடவக்கைகளில் பல்வேறு ஆலோசனைகளை தமிழக மக்களுக்கும், களப்பணியில் ஈடுபடுகிறவர்களுக்கும் அரசு வழங்குகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் தொற்று நடவடிக்கைகளைத் தடுப்பதில் நாம் முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
முன்பு, தேனாம்பேட்டை 9-வது மண்டலத்தில் 100 பேரைப் பரிசோதித்தால் அதில் 35 பேருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன. தற்போது அது 16.52 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவை எல்லாம் இன்னும் சில நாட்களில் சென்னை மாநகராட்சியில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பதற்கு உதாரணமாகும்.
அது மட்டும் இல்லாமல் இந்த மண்டலத்திற்கு மட்டும் 1,987 தெருக்கள் உள்ளன. அதில் 741 தெருக்களில்தான் தொற்று உள்ளது. மற்ற தெருக்களில் எந்தவிதத் தொற்றும் இல்லை.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற அடிப்படையில் தேனாம்பேட்டை மண்டலம்தான் ஆரம்பத்தில் அதிகமாகத் தொற்று உள்ள மண்டலமாக இருந்தது. நாங்கள் பொறுப்பேற்ற காலத்தில் இருந்தே தொடர்ந்து தொற்று தொடரும் மண்டலம். எனவே, இந்த மண்டலத்தின் முன்னேற்றம் என்பது இந்தத் தொற்று நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றம் என்பது மாநகராட்சி முழுவதும் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாக நாம் கருதவேண்டும்.
அதாவது இந்த மண்டலத்தில் மட்டும் 975 பேர் தினந்தோறும் பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றுகிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த மண்டலத்தில் மட்டும் 200 பேர் சமுக ஆர்வலராகப் பணியாற்றுகிறார்கள். கிட்டதட்ட 1,200 பேர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது, தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற பணிகளைத் தினந்தோறும் செய்துகொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இறப்பு எண்ணிக்கை இந்த மண்டலத்தில் குறைந்துள்ளது. இது நாளடைவில் முன்னேற்றத்திற்கு ஒரு வழிகோலாக இருக்கும். இந்த மண்டலத்தில் 1,134 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் 77,000 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில் 3,109 நபர்களுக்குக் காய்ச்சல், சளி, இருமல் கண்டறியப்பட்டு 2,550 பேர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 793 பேருக்கு நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டது.
வெகுவிரைவில் சென்னை மாநகரில் கரோனா தொற்று குறையும் என்ற நம்பிக்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தமிழகத்திற்குத் தேவையான 14 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை மத்தியத் தொகுப்பிலிருந்து நாம் கொள்முதல் செய்கிறோம். அது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கோதுமை பற்றாக்குறை என்ற நிலையில்லை.
சென்னையைச் சேர்த்து 4 மாவட்டங்களில் நிவாரணத்தொகை 1000 ரூபாயை 94 சதவீதம் மக்கள் பெற்றுக்கொண்டனர். அதேபோல் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அறிவித்த பகுதிகளில் 95 சதவீதம் பேர் நிவாரணத் தொகையைப் பெற்றுக்கொண்டனர்''.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.