

கோவையில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சிறு, குறு தங்க நகைப் பட்டறைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பொற்கொல்லர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கோவை பொற்கொல்லர் சங்கத் தலைவர் எஸ்.எம்.கமலஹாசன் தலைமையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பாபுஜி, மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபரிகிரிஷ், விஸ்வஜன முன்னேற்றக் கழகத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் இன்று (ஜூலை 7) மனு அளித்தனர்.
பின்னர் பொற்கொல்லர் சங்கத்தினர் கூறும்போது, "கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நகைத் தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை உருவானது. தற்போது ஒருசில பெரிய தொழிற்கூடங்கள், அரசின் விதிமுறைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் செயல்பட்டன.
இதையடுத்து, ஒட்டுமொத்தமாக சிறு, குறு நகைப்பட்டறைகளை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், நகைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, கரோனா வைரஸ் பாதித்த தொழிற்கூடங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத தொழிற்கூடங்களை மட்டும் மூட உத்தரவிட வேண்டும்.
அரசின் அறிவுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படும் சிறு, குறு நகைப் பட்டறைகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்" என்றனர்.
இதனிடையே, கோவை செல்வபுரம் அசோக் நகரில் ஆனந்தன் என்பவரது நகைப் பட்டறையில் பணிபுரிந்த 34 பேருக்குத் தொற்று உறுதியானது. இதையடுத்து, தொற்று நோய்ப் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆனந்தன் மீது செல்வபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.