புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டம் அதிகரிப்பு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் தனிப்பிரிவு கோரி முதல்வரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு

முதல்வரிடம் மனு அளித்த திமுக எம்எல்ஏக்கள்
முதல்வரிடம் மனு அளித்த திமுக எம்எல்ஏக்கள்
Updated on
1 min read

புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளதால் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் தனிப்பிரிவு கோரி முதல்வரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு தந்தனர்.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா நடமாட்டம் அதிகரித்து வந்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு கஞ்சா கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக முதல்வர் நாராயணசாமியே தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, காவல்துறையினர் எடுத்த கடுமையான நடவடிக்கையால் புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டம் சிறிது காலம் இல்லை. தற்போது மீண்டும் புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசின் கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏக்கள் சிவா, வெங்கடேசன் ஆகியோர் இன்று (ஜூலை 7) முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கஞ்சாவை கட்டுப்படுத்தக்கோரி மனு தந்தனர்.

அந்த மனு விவரம்:

"மீண்டும் கஞ்சா நடமாட்டம் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவ, மாணவிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இவர்களில் யார், யாரிடம் பணம் நடமாட்டம் அதிகம் உள்ளது என்பதை கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் கண்டறிந்து அவர்களிடம் முதலில் கஞ்சா விற்பனை செய்கின்றது. கஞ்சாவால் இளையோர் குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பிரச்சினைகளும் நடைபெற்று வருகின்றன.

ரயில் சேவை, பேருந்து சேவை இல்லாத இக்கால கட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா எவ்வாறு கொண்டு வரப்படுகிறது, எந்த வகையில் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு இளைஞர்களிடம் சேர்க்கப்படுகின்றது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான ஒரு தனிப்பிரிவை உருவாக்கி, கஞ்சா நடமாட்டத்தை நிறுத்துவதற்கான பணியை துரிதப்படுத்த வேண்டும்"

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in