Published : 07 Jul 2020 03:21 PM
Last Updated : 07 Jul 2020 03:21 PM

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற அளவுகோல் சமூக நீதிக்கு எதிரானது: கி.வீரமணி எச்சரிக்கை

சென்னை

இட ஒதுக்கீட்டிற்கான அளவுகோல் - சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்பதுதான் சட்ட ரீதியான ஒன்று. இதில் கொஞ்சம் கொஞ்சமாக, அடுத்தடுத்து பொருளாதார அளவுகோலைத் திணிப்பது - எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே முற்றிலும் ஒழிக்கப்படும் என கி.வீரமணி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை

“பிற்படுத்தப்பட்டோரில் ‘கிரீமிலேயர்’ எனும் முன்னேறிய பிரிவினரை அடையாளம் காண்பதற்கு, அவர்களது சம்பளப் பணத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அரசு நியமித்த சர்மா குழு யோசனைக்கு, முன்பு எதிர்ப்பு தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தற்போது அதில் இருந்து பின் வாங்கி, ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவு மண்டல் அறிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்டோருக்கான வரையறையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

‘தனியார் ஆங்கில நாளிதழ்’ செய்தி

இன்றைய தனியார் ஆங்கில நாளிதழ் (7.7.2020), பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயர் குறித்த வருமான வரம்பை தற்போதுள்ள ரூ.8 லட்சத்தை ரூ.12 லட்சமாக உயர்த்தவும், அதில் சம்பள வருமானமும் சேர்க்கப்படும் என்றும், இதுகுறித்து மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு எடுக்க உள்ளது என்றும், பிஹார் மாநிலத் தேர்தலையொட்டி இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் ‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோர்’’ என 15 (4), 340 ஆகிய பிரிவுகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. மண்டல் வழக்கில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில், கிரீமிலேயர் என்பது திணிக்கப்பட்டது. நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மட்டும் தனது தனிப்பட்ட தீர்ப்பில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்திரா சகானி வழக்கில், ஜஸ்டீஸ் எஸ்.ரத்தினவேல்பாண்டியன் எழுதிய தனித் தீர்ப்பில், ‘கிரீமிலேயர்’ என்று மற்ற நீதிபதிகள் புகுத்திய வருமான வரம்பை அவர் ஏற்கவில்லை; ஆனால், முற்றிலும் பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாததை மற்ற நீதிபதிகளின் சார்பில் தீர்ப்பு எழுதிய ஜஸ்டீஸ் ஜீவன்ரெட்டி பொருளாதார அளவுகோலைப் புகுத்தியது குறித்து அப்போதே நாம் எதிர்த்து, அது தவறான முடிவு என்று சுட்டிக்காட்டத் தவறவில்லை.

1. பொருளாதார அடிப்படை என்பதாக அரசமைப்புச் சட்ட இட ஒதுக்கீடு பிரிவுகள் கிடையாது. காரணம், பிரதமர் நேரு - நாடாளுமன்றத்தில் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்த விவாதத்தின்போது கூறியதுபோல, அது நிலையான அளவுகோல் அல்ல, ஆண்டுக்கு ஆண்டு மாறக் கூடியது.

2. ‘கிரீமீலேயர்’ என்ற பாகுபாடு - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே புகுத்தப்பட்டது. (மற்றவர்களுக்குப் புகுத்தப்பட வேண்டும் என்பதல்ல நமது வாதம்) யாருக்குமே தேவையில்லை என்பதே நமது நிலைப்பாடு.
பிராமணர் போன்ற முன்னேறிய சாதியினர், பிற்படுத்தப்பட்டவர், எஸ்.சி., எஸ்.டி., என்ற பிரிவினர் என்று மூன்று அடுக்கு (Three tier) உள்ளதில், மற்ற பிரிவுகளுக்கு இல்லாத, இடையில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு மட்டும் என்பது சமூக அநீதி அல்லவா?

3. பந்தியில் உட்கார வைப்பதற்கு முன்பே - பரிமாறுவதற்கு முன்பே - பணக்கார பிற்படுத்தப்பட்டவர்களே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்கள்; ஆகவே, இந்த அளவுகோல் என்று கூறலாமா?

4. அந்தக் கோரிக்கையைப் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லவா வைத்திருக்கவேண்டும். முன்னேறிய சாதி பிராமணர்களா இதைச் செய்வது - ஆதரிப்பது?

தெளிவான வரையறை

மத்திய அரசு பணிகளில் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய பணியாளர் அமைச்சகத்தின் 8.9.1993 தேதியிட்ட ஆணையின்படி, கிரீமிலேயர் முறையில் வருமான வரம்பைக் கணக்கிடும்போது, சம்பள வருமானத்தையும், விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே பணியாளர் நல அமைச்சகம் 6.10.2017-ல் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தன்னிச்சையாக ஆணை பிறப்பித்தது சரியானதுதானா? இதைக்
கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

இதற்கு பல பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்து விசாரிப்பதற்காக, மக்களின் கருத்தையும் பெற்று, அதேபோன்று பணியாளர் நலன், சமூக நலத்துறை, மனித வளத்துறை, சட்டத்துறை அதிகாரிகள் மற்றும் தேர்வு ஆணைய அதிகாரிகள் அனைவரையும் அழைத்து விசாரித்து, இறுதியாக 9.3.2019 அன்று நாடாளுமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் கிரீமிலேயர் தொடர்பாக சம்பள வருமானம், விவசாய வருமானம் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது எனப் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால், அக்குழுவின் அறிக்கையின்மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், சமூகநீதி அமைச்சகம், பணியாளர்துறை அமைச்சகத்தில் செயலாளராக இருந்த பி.பி.சர்மா தலைமையில், மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்தது. பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து நியமிக்கப்பட்ட இக்குழுவில் ஒரு பிற்படுத்தப்பட்டோர் கூட நியமிக்கப்படவில்லை.

அக்குழு தனது அறிக்கையை செப்டம்பர் 2019-ல் மத்திய அரசுக்கு தந்துள்ளது. அதில், பிற்படுத்தப்பட்டோரில் கிரீமிலேயர் பற்றிய அளவுகோலில், தற்போதுள்ள 8.9.1993 ஆணையை முழுவதுமாக மாற்றிவிட்டு, வருமான வரம்பின் அடிப்படையில் கிரீமிலேயர் அளவுகோல் இருக்கவேண்டும், அதில் சம்பள வருமானமும் சேர்க்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது.

சர்மா குழு அறிக்கையின் பரிந்துரைக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தினை மார்ச் 2020 இல் அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆனால், தற்போது, மீண்டும் சர்மா குழு அறிக்கை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, அவர்களது ஒப்புதலும் பெறப்படுகிறது என்கிற தகவலை ‘தனியார் ஆங்கில நாளிதழ்’ (டில்லி பதிப்பு) 3.7.2020 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து அநீதி இழைத்து வரும் நிலையில், சர்மா குழு அறிக்கையும் நிறைவேற்றப்பட்டால், ‘‘சமூக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர்’’ என்ற அரசமைப்புச் சட்டத்தின் கூற்று மாற்றப்பட்டு, ‘பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோர்’ என்று மாற்றப்படும் அபாயம் உள்ளது.

இதனை சமூகநீதியாளர்கள் இந்திய அளவில் ஒன்றுபட்டு எதிர்க்க முன்வரவேண்டும்! இல்லையெனில், இட ஒதுக்கீட்டில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக என்ற அளவுகோல் முற்றிலுமாக நீக்கப்படக் கூடிய அபாயம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும்.

பொருளாதார அளவுகோல் என்ற ஒட்டகம் உள்ளே நுழைகிறது, இதனை இந்தக் கட்டத்திலேயே முறியடிக்காவிட்டால், எதிர்காலத்தில், இட ஒதுக்கீடு, சமூகநீதி என்ற சொற்களே இடம்பெறாமல் போய்விடும்”.

இவ்வாறு வீரமணி எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x