

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் தலைமையில் இன்று (ஜூலை 7) நடைபெற்றது.
இதில், புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்கணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், நலவழித்துறை நோய்த்தடுப்பு பிரிவு துணை இயக்குநர் கே.மோகன்ராஜ் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
கூட்டத்துக்குப் பின்னர் மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உரிய வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களிடையே போதிய விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக அருகில் உள்ள தமிழக மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. காரைக்காலில் நடமாடும் பரிசோதனை வாகனம் செயல்பாட்டில் உள்ளது.
காரைக்காலிலேயே கரோனா பரிசோதனை மையம் அமைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்காலில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் கிளை மூலம் எந்த வகையில் கரோனா தடுப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ள முடியும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அது குறித்து மருத்துவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.
அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறும்போது, "புதுச்சேரி முதல்வர் காணொலி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் பல முறை மத்திய அரசுடன் பேசியுள்ளார். ஆனால், மத்திய அரசு கூடுதலாக நிதியுதவி செய்யவில்லை. மத்திய அரசு வெறுமனே ஆலோசனைகளை மட்டுமே சொல்கிறார்களே தவிர பெரிய அளவில் நிதியுதவி எதுவும் செய்யவில்லை" என்றார்.