Last Updated : 07 Jul, 2020 02:22 PM

 

Published : 07 Jul 2020 02:22 PM
Last Updated : 07 Jul 2020 02:22 PM

தென்காசி மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கரோனா: சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு

தென்காசி 

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 506 பேர் கண்டறியப்பட்டதில், 324 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில், ஆலங்குளத்தைச் சேர்ந்த தங்கம் (75) என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஆஞ்சியோகிராம் செய்வதற்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு கரோனா அறிகுறி இருந்தது. இதனால், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி தங்கம் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினரும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் தன்னார்வ மீட்புக் குழுவினர் தங்கம் உடலை பெற்றுக்கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி ஆலங்குளத்தில் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், இன்று மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் சென்னையில் இருந்தும், ஒருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் குஜராத்தில் இருந்தும், ஒருவர் கர்நாடகாவில் இருந்தும், ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் வந்தவர்கள்.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆலங்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், ஓடைமரிச்சான் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட கரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

இவர்கள் தென்காசி, ஆலங்குளம், இலஞ்சி, சீவநல்லூர், விஸ்வநாதபுரம், ஊத்துமலை, புளியங்குடி, சுரண்டை, கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில், சேர்ந்தமரம், சிவகிரி, கீழப்பாவூர், வடகரை, சிவலார்குளம் பகுதிகளைச் சேர்நதவர்கள். தென்காசியில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x