

கரோனா சிகிச்சைக்காக மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் தயாரித்துள்ள IMPRO எனும் மருத்துவப் பொடியை மத்திய அமைச்சகம் பரிசோதித்து, அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்திய மருத்துவம் தொடர்பான மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
ஆகவே இந்திய மருத்துவமுறையை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும், மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, சாதாரண மனிதரும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது.
இதுவரை கரோனோ நோய்க்காக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
சீனாவில் அவர்களின் பாரம்பரிய மருத்துவ முறையை பின்பற்றுவதாகவும், அதன் காரணமாகவே நோய்த்தொற்று பரவல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த அடிப்படையில் முடக்கத்தான் இலை, வெட்டிவேர், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 66 மருத்துவப் பொருட்களைக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மருத்துவப் பொடி ஒன்றை தயார் செய்துள்ளேன்.
இது உடலுக்கு எவ்விதமான எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாது. இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலமாக தெரிவித்த நிலையில் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.
ஆகவே சித்த மருத்துவத்தின் அடிப்படையில் கரோனோவிற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருத்துவப் பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தருவிக்க ,ஆயுஷ் அமைச்சகத்தின் செயலருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவினர், மருத்துவப் பொடியை ஆய்வு செய்து, நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், வைரஸ் எதிர்ப்பு சக்தியும் இருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆய்வு குழுமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பாக பரிசோதிக்க சித்தா மற்றும் ஆயுர்வேத கவுன்சிலுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது அதனடிப்படையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து, அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், இந்திய மருத்துவம் தொடர்பான மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. ஆகவே இந்திய மருத்துவமுறையை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும், மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, சாதாரண மனிதரும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.