

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்போர், கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிப்போர் அங்கிருந்து வெளியே வருவதைக் கண்காணிக்க 'கோவிட் வார் ரூம்' அமைத்துள்ளது புதுச்சேரி சைபர் க்ரைம்.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கட்டுப்பாட்டுப் பகுதிகளும் புதிது புதிதாக உருவாகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்போர் வெளியே இயல்பாக சுற்றுவதே தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்குக் காரணம்.
கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியே சுற்றுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
இச்சூழலில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு தொடர்பான விவரங்களை ஒருங்கிணைக்க, காவல்துறை தலைமையகம் மூலம் சைபர் க்ரைம் செல்லில், இன்று முதல் 'கோவிட் வார் ரூம்' (COVID war room) செயல்படத் தொடங்கியுள்ளது.
கோரிமேட்டில் சைபர் க்ரைம் அலுவலக மாடியில் அமைந்துள்ள 'வார் ரூம்', எஸ்எஸ்பி ராகுல் அல்வால் தலைமையில் 2 எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., 20 போலீஸார் 24 மணி நேரமும் இயங்குவார்கள்.
கரோனா தொற்று தொடர்பாக பணியாற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, தகவல்களைச் சேகரித்து, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கும் மையப் புள்ளியாக 'வார் ரூம்' செயல்பட உள்ளது.
முக்கியப் பணி தொடர்பாக உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "கரோனா வார்டுடன் இணைந்த எண்களை, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்போர் வெளியே வந்தால் அத்தகவலை டெலிகாம் துறையுடன் இணைந்து பெறுவோம். கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்போர் வெளியே போன நேரம், சந்தித்தோர் விவரம், இதனால் கரோனா பரவல் வாய்ப்பு தொடர்பாக முழுத் தகவல் பெற முடியும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியே வந்தோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்வார்கள்.
கரோனா பாதித்த நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்கள், தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தவர்கள் விவரங்கள் முக்கியமாகக் கண்காணிக்கப்படும்.
இ-பாஸ் விவரங்களின் தொகுப்பு, வாட்ஸ் அப் குழுக்களைக் கண்காணித்தல், கரோனா தொடர்பான இலவச தொலைபேசி எண்ணுக்கு வரும் தகவல்களின் உண்மைத்தன்மையை சோதித்தல் உள்ளிட்ட பணிகள் 'வார் ரூம்' மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது" என்று தெரிவித்தனர்.
குறிப்பாக 'வார் ரூமில்' இருந்து வரும் அறிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கரோனா தடுப்புக்காக அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.