Published : 07 Jul 2020 07:21 AM
Last Updated : 07 Jul 2020 07:21 AM

சேதமடைந்த தடுப்பணைகளை பார்வையிட சென்ற ஆம்பூர் எம்எல்ஏ காலணிகளை எடுத்துச் சென்ற திமுக பிரமுகர்

ஆம்பூர் அருகே கனமழையால் சேதமடைந்த தடுப்பணைகளை பார்வையிட சென்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதனின் காலணியை திமுக பிரமுகர் எடுத்துச்செல்லும் காட்சி நேற்று சமூக வலைதளங்களில் பரவி சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 30-ம் தேதி கனமழை பெய்தது. இதனால், பொன்னப்பல்லி ஏரி நிரம்பி மழைநீர் வழிந்தோடியது. இதன் காரணமாக, அங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை முழுமையாக சேதமடைந்து மழைநீர் வெளியேறி அருகேயுள்ள 30 ஏக்கர் விவசாய நிலத்தில் தேங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் (திமுக) ஆர்.வில்வநாதன் தனது கட்சியினருடன் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடச் சென்றார். அப்போது, பொன்னப்பல்லி ஏரி அருகே உள்ள கால்வாய் உடைந்து மழைநீர் வேகமாக சென்றது. அதில்இறங்கி நடக்க முயன்ற வில்வநாதன் தனது காலணிகளை கழட்டினார். அப்போது, உடன் சென்ற வெங்கடாபுரம் ஊராட்சி திமுக பிரமுகர் சங்கர் என்பவர் எம்எல்ஏவின் காலணியை கையில் எடுத்துக்கொண்டு சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. ‘ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தமது காலணியை, பட்டியலினத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரை தூக்கி வரச் செய்தார்’ என தகவல் பரவியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘கனமழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடச் சென்றபோது சேறும் சகதியுமான பகுதியில் நடந்து செல்ல ஏதுவாக எனது காலணிகளை கழட்டிவிட்டேன். எனக்கு பின்னால் வந்த திமுக பிரமுகர் சங்கர் எனக்கே தெரியாமல் அந்த காலணிகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். இதைக்கண்ட நான் உடனே, அதை கீழே போடச் சொன்னேன். அவரும் அதை கீழே போட்டுவிட்டார்.

எனது வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டவர்கள், காழ்ப்புணர்ச்சியால் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்திவிட்டனர். நான் எம்எல்ஏ ஆவதற்கு முன்பே ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவன். எனக்கு சாதி, மத பேதம் கிடையாது. எல்லோரையும் என் சகோதரர்களாக பார்க்கிறவன். பட்டியலின மக்கள் வீட்டுக்கே சென்று வருகிறேன். அப்படியிருக்கும்போது என் மீது வீண் பழியை சுமத்தி, அதில் அரசியல் ஆதாயத்தை தேட பார்க்கின்றனர். இதுகுறித்து கட்சி தலைமைக்கு நான் விளக்கம் கொடுத்துவிட்டேன்" என்றார்.

ஏற்கெனவே, தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கடந்த பிப்.6-ம் தேதி நீலகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனதுகாலணிகளை பழங்குடியின சிறுவனை அழைத்து கழற்றிவிடச் செய்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்துக்காக திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், தற்போது திமுக எம்எல்ஏவும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை போல நடந்துகொண்டார் என சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x