

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அர்ச்சுணன் எம்எல்ஏ ஆகியோர் விரைவில் நலம் பெற வேண்டும் என முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவினாலும் நிவாரணப் பணி, அரசுப் பணிகளில் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, செயல்பட்டு வருகின்றனர். இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அம்மன் அர்ஜுனன், பா.வளர்மதி ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் விரைந்து நலம்பெற வேண்டும் என முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவு:
“கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் விரைவில் பூரண நலம்பெற்று இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.