Published : 06 Jul 2020 10:35 PM
Last Updated : 06 Jul 2020 10:35 PM

‘ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்புக்குத் தடை; தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை

ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட நிலையில், அதை வாய்மொழி உத்தரவாகப் பிறப்பிக்காமல் தமிழக அரசு அரசாணையாக வெளியிட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

''ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற காவல்துறையின் நண்பர்கள் என்னும் தனி அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்று நாம் நேற்று அறிக்கை விடுத்தோம். பல அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிறுவனமான (Extra - Constitutional Organisation) காவல்துறையால் உருவாக்கப்பட்ட அந்த அமைப்புக்குத் தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்குத் தடை விதித்துள்ளதாக, டிஜிபி திரிபாதி வாய்வழி ஆணை கூறி (Oral Instruction) அதை சில மாவட்டங்கள் பின்பற்றுகின்றன என்று தனியார் ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி இன்று வந்துள்ளது.

இது உறுதி செய்யப்பட்ட செய்தியாக இருப்பின், நாம் அதனை வரவேற்கிறோம். 2 மாதங்களுக்கு மட்டும் என்று ஏன் கால நிர்ணயம் செய்யவேண்டும்? அதைத் தமிழக அரசே ஆணைகள் மூலம் கலைத்து, தேவையற்ற வீண் சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

காவல் துறைக்குத் தகவல் கொடுப்போர் (police informers) என்று சிலர் பற்றிக் கூறுவது உண்டு. அதுவே பலராலும் விரும்பத்தகாத ஒரு சமூக நிலைப்பாடு என்கிறபோது, இப்படிக் காவல்துறையில் ஒரு தேவையற்ற அமைப்பை உருவாக்குவது, பிறகு அது காவல்துறைக்கும், அரசுக்குமே பெரும் கேடாய் முடியும் ஆபத்தும் அதில் உள்ளதை எவரும் மறுக்க முடியாது.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அதன் பங்கு என்ன? எனவே, தமிழக அரசே உடனடியாக முன்வரவேண்டும். நிரந்தரமாகவே அதனைத் தடை செய்து, தமிழக அரசு எழுத்து மூலம் ஆணை பிறப்பிப்பது நல்லது''.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x