

மூன்று தலைமுறைகளாக சாலை, மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளின்றி, செங்கல்புதூர் பழங்குடியின கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது செங்கல்புதூர் பழங்குடியின கிராமம். இங்கு ஆலு குரும்பர் இனத்தைச் சேர்ந்த 25 குடும்பத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த கிராம மக்கள் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
‘தொட்டில்’ பயணம்
இந்தக் கிராமத்துக்கு செல்லும் சாலை, குன்னூரில் இருந்து நான்சச் எஸ்டேட் வரை மட்டுமே சீராக உள்ளது. நான்சச் எஸ்டேட்டிலிருந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இப்பகுதிக்கு வாகனங்கள் வருவதில்லை. மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டலோ தொட்டில் கட்டி, சுமார் 7 கி.மீ. அவர்களை சுமந்து நான்சச் எஸ்டேட் வர வேண்டும். பின்னர், அங்கிருந்து ஏதேனும் வாகனம் மூலமாக குன்னூரிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்தச் சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் நிலையில், எஸ்டேட் நிர்வாகம் முட்டுக்கட்டையாக இருப்பதால் சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இருளில் கிராமம்
ஆதிவாசிகள் கூட்டமைப்பின் பொருளாளர் மணி கூறியதாவது:
மின்சார வசதி இல்லாததால், ஊருக்கு நடுவே வனத்துறை சார்பில் 3 சூரிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு மட்டுமே எரிகின்றன. வீடுகளில் மின்சாரம் இல்லாததால், சூரிய மின் விளக்கு வெளிச்சத்தில் தான் மாணவர்கள் படிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அரசு சார்பில் இலவச பொருட்கள் விநியோகிக் கப்பட்டன. அவை, வீடுகளில் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. வனப்பகுதிகளில் இருந்து மூலிகைகளை சேகரித்து, விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் நிலையில், மின்சார வசதி இல்லாததால், அந்தத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
உலிக்கல் பேரூராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, “உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட செங்கல்புதூர், யானை பள்ளம், ஜோதிகொம்பை உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால், சாலை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வனத்துறையினரின் அனுமதி தேவை. ஆனால், அனுமதி பெறுவது பெரும் சிரமம்.
இந்நிலையில், நான்சச் எஸ்டேட்டிலிருந்து பக்காசூரன் மலை வரையுள்ள சாலையை சீரமைக்க ரூ.4 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தாட்கோவிடம் நிதி கோரப்பட்டுள்ளது. இதற்கான சர்வே பணிகளும் நடைபெற்று வருகின்றன” என்றார்.