

பட்ஜெட் தொடர்பான கோப்பினை தாமதப்படுத்தியதாக முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுத்துள்ளார். கோப்பு வந்த தேதி தொடங்கி அனுப்பியது வரை ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963-ன்படி வருடாந்திர பட்ஜெட் திட்டம் துணைநிலை ஆளுநர் பரிந்துரையுடன் முன் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு சட்டப்பேரவையில் பட்ஜெட் நிறைவேற்றப்படுவது வழக்கம். புதுச்சேரியில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்தான் தாக்கலாகிறது.
"நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறுவதற்கான கோப்பை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பினோம். பல கேள்விகள் எழுப்பி அவர் தாமதத்தை ஏற்படுத்தினார்" என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (ஜூன் 6) கூறுகையில், "உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைப்பதில் எவ்வித தாமதமும் செய்யப்படவில்லை. பட்ஜெட் மதிப்பீட்டை உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்கும் கோப்பு கடந்த மே 7-ம் தேதி துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு வந்தது. நிதித்துறையிலிருந்து தேவையான விளக்கம் பெற்ற பிறகு மே 13-ம் தேதியன்று பரிந்துரைக்கப்பட்டது.
உள்துறை அமைச்சகம் கோப்பில் சில சந்தேகத்தை எழுப்பியது. இதற்கான கோப்பு கடந்த ஜூன் 10-ம் தேதி துணைநிலை ஆளுநரின் அலுவலகத்துக்கு அரசால் சமர்ப்பிக்கப்பட்டது. அதே நாளில் உள்துறை அமைச்சகத்துக்கு அக்கோப்பு துணைநிலை ஆளுநர் ஒப்புதலுடன் அனுப்பப்பட்டது" என்று தெரிவித்தார்.