

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மேலும், 92 வயது முதியவர் ஒருவர் கரோனாவுக்கு பலியானார். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1271 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆகவும் அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1162 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1271 ஆக அதிகரித்துள்ளது.
மாநகராட்சி மூலம் கரோனா பரிசோதனையை அதிகரிக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரேஸ்புரத்தில் நடந்த முகாமில் சுமார் 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று பிரையண்ட் நகர் பகுதியில் முகாம் நடத்தப்பட்டது. இதில் 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த பிரிவு அலுவலகம் மூடப்பட்டது. தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த ஜவுளிக் கடை மூடப்பட்டது. அதுபோல சிப்காட் வளாகத்தில் உள்ள சாக்குப்பை தயாரிக்கும் ஒரு ஆலையில் பணியாற்றும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த ஆலை மூடப்பட்டது. மேலும், தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பிரபல செல்போன் நிறுவனத்தின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அந்த அலுவலகம் மூடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
92 வயது முதியவர் பலி:
தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் உயிரிழந்தார். இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 92 வயது முதியவர் கடந்த 5-ம் தேதி உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.