

முதுமலை அருகே கேட்டைத் திறந்ததும் மணி ஓசையுடன் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் இயந்திரத்தை ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மசினகுடியைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு ஊழியர் கென்னடி. இவர், கேட்டைத் திறந்ததும் இனிமையான இசை முழங்க கிருமிநாசினி தெளிக்கும் புது வகை இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார். கரோனா காலத்தில் கைகளைச் சுத்தம் செய்யும் வகையிலும் அதே நேரத்தில் எச்சரிக்கை மணியாகவும் இருக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது
பழைய காரிலிருந்து எடுக்கப்பட்ட வைப்பர்டேங்க் மற்றும் யுபிஎஸ் கருவிகளுடன் செலவே இல்லாமல் இதை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து கென்னடி கூறும் போது, "கேட்டின் அருகே அழுத்தும் வகையில் ஒரு 'சுவிட்ச்' வைக்கப்பட்டுள்ளது. கேட்டைத் திறக்கும்போது 'சுவிட்ச் ஆன்' ஆகி மின்விநியோகம் தூண்டப்படுகிறது. இதனால், மின் மோட்டார் இயங்கி கிருமிநாசினி கொட்டுகிறது.
பின்னர் கேட் மூடியவுடன் சுவிட்ச் அணைந்துவிடும். எவ்வளவு நேரம் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று டைமர் மூலம் குறைத்தோ, அதிகரித்தோ வைத்துக்கொள்ளலாம். மின்சாரம் இல்லையென்றாலும் யுபிஎஸ் மூலம் இயங்கும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பழைய பொருட்கள் மூலம் இவற்றை வடிவமைத்துள்ளேன்" என்றார்.