

கொடைக்கானலில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட நிலையில் முடிவுகள் வரவில்லை. இதனால் மேலும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ள நிலை உள்ளது.
மேலும் பரவாமல் தடுக்க கொடைக்கானல் வர்த்தகர் சங்கங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கு தளர்வு நேரத்தை குறைத்துக்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதன்படி ஜூலை 11-ம் தேதி சனிக்கிழமை வரை காய்கறி, பால், இறைச்சி கடைகள் காலை 7 மணிமுதல் பகல் 2 மணிவரை மட்டுமே இயங்கும் எனவும், டீ கடைகள், சலூன் கடைகள் முற்றிலும் இயங்காது எனவும் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் கொடைக்கானலில் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் என்றும், இதற்கு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழக அரசு தளர்வுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டு இரவு 7 மணி வரை கடை திறந்திருக்கலாம் என அறிவித்துள்ள நிலையில் கொடைக்கானல் வர்த்தர்கள் தாங்களாகவே முன்வந்து கட்டுப்பாடுகளை விதித்து கரோனாவில் இருந்து கொடைக்கானல் மக்களை காக்க முன்வந்துள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர்.