

கோவை சரகத்தில் தவறு செய்யும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி க.ச.நரேந்திரன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மேற்கு மண்டல காவல்துறைக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக காவல்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த கார்த்திகேயன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இவருக்கு பதில் சென்னை பெருநகர காவல்துறையில் தலைமையிட டிஐஜியாக பணியாற்றி வந்த க.ச.நரேந்திரன் நாயர், கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். இவர், கோவை சரக டிஐஜியாக இன்று (ஜூலை 6) பதவியேற்றுக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த க.ச.நரேந்திரன் நாயர், கடந்த 2005-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாவார். ஈரோடு, கமுதி, வந்தவாசி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி, 2009-ம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார். எஸ்பிசிஐடி எஸ்.பி., தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்களின் எஸ்.பி.யாகவும், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் துணை ஆணையராகவும், ஆளுநரின் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும், கேரளா மாநிலத்தில் ஐ.பி. பிரிவு எஸ்.பி.யாகவும் க.ச.நரேந்திரன் நாயர் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற நரேந்திரன் நாயர் சென்னை தலைமையிட டிஐஜி பணியாற்றிய பின்னர், தற்போது கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.பதவியேற்புக்கு பின்னர் டிஐஜி க.ச.நரேந்திரன் நாயர் கூறும்போது, "கோவை சரகத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்படும். தவறு செய்யும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் காவல்துறை சார்ந்த தங்களது குறைகள், புகார்களை எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.