

திருச்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விரைவில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது மற்ற பகுதிகளிலும் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
கரோனாவுக்கு இன்னும் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதைக் கட்டுப்படுத்த கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் பெரிதும் உதவி வருகிவதாக சித்த மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா வார்டில் தற்போது சித்தா, ஹோமியோ மருத்துவர்களும் தினமும் நோயாளிகளைச் சந்தித்து மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றனர். சென்னையில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 3 இடங்களில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 600-க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேபோல, திருச்சியிலும் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ சிகிச்சை மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரு பகுதி ஒதுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜிடம் கேட்டபோது, "திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டு மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள கரோனா பாதுகாப்பு மையம் ஆகியவற்றுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறோம்.
தினமும் காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர, நாங்கள் நோயாளிகளைச் சந்திக்கும்போது அவர்களுக்கு அமுக்கரா சூரணம், பிரமானந்த பைரவ மாத்திரை ஆகியவற்றுடன் கவுன்சிலிங்கும் அளித்து மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி தைரியப்படுத்தி வருகிறோம்.
கரோனாவால் மூச்சுத்திணறல் அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள்கூட கபசுர குடிநீரை முறையாக எடுத்துக் கொண்டு முழு குணமடைந்துள்ளனர். மக்களுக்கு சித்த மருத்துவத்தின் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவரும் அதற்கென ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி கபசுர குடிநீர் சூரணம் வழங்கி வருகிறோம். இதேபோல், னைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளிலும் கபசுர குடிநீர் சூரணம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் மட்டும் இதுவரை 10 ஆயிரம் கிலோ கபசுர குடிநீர் சூரணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் முறையாக எடுத்துக் கொண்டால் கரோனா பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்றார்.