

மின்சார வரைவு திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் கடலூரில் தொடங்கியது.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 6) காலை கடலூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மின்சார வரைவு திருத்தச்சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020, வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசர சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நடைபெறும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது, வரும் 27-ம் தேதி அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி கடலூர் ஜவான் பவன் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்க கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் கூறுகையில், "மின்சார வரைவு திருத்தச்சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020, வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகிய 4 சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.