

கும்பகோணம் அருகே ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் நிவாரண நிதி பெற 70 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஏனாநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் நடேசன் (73). மாற்றுத்திறனாளியான இவர், விவசாய வேலைகளையும், அவ்வப்போது சைக்கிளில் அந்தப் பகுதியில் கோலமாவும் விற்று வருகிறார்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நடேசன் மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரண நிதி பெறலாம் எனக் கருதி இன்று (ஜூலை 6) காலை 3 மணிக்கு ஏனாநல்லூரிலிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை கேட்டு மனுவை வழங்கினார்.
அங்கிருந்த அதிகாரிகள், உடல் தகுதிச் சான்றினை கும்பகோணத்தில் எலும்பு மருத்துவரிடம் வாங்கி வரும்படி அவரைத் திருப்பி அனுப்பினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சைக்கிள், அதில் காற்றடிக்கும் பம்ப் உடன் திகைத்து நின்ற முதியவரை செய்தியாளர்கள் அணுகி விவரம் கேட்டனர்.
இதைப் பார்த்த காவல் துறை உதவி ஆய்வாளர் சுகுமார் மற்றும் காவல்துறையினர் முதியவரை அழைத்துச் சென்று அவருக்குக் குளிர்பானம் வாங்கி கொடுத்து, மீண்டும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், நடேசனிடம் விசாரித்து, அவருக்கு மதிய உணவு வாங்கிக் கொடுத்து இந்த மனுவை கும்பகோணத்தில் மருத்துவரிடம் சான்றிதழை வாங்கி அதனை அங்குள்ள வட்டாட்சியர் அலுவலத்தில் கொடுத்தால் போதும் எனக் கூறி அனுப்பினார்.
இதுகுறித்து நடேசன் கூறும்போது, "எனது சின்ன வயதிலேயே மாடு காலில் மிதித்ததால் இடது கணுக்காலின் கீழ்ப் பகுதி செயலிழந்துவிட்டது. இருந்தாலும் நான் சைக்கிளில்தான் செல்வேன். எனது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். ஒரு மகன்தான், அவர் தனியாகவும், நான் தனியாகவும் வசித்து வருகிறோம். நான் சைக்கிளில் அவ்வப்போது கோலமாவு விற்பேன். இரு ஆண்டுகளுக்கு முன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை கேட்டு கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் ,எனக்கு அட்டை ஏதும் வரவில்லை.
தற்போது கரோனா ஊரடங்கால் வருவாய் இல்லாமல் சிரமப்பட்டு வந்தேன். இதனால் அரசு வழங்கும் நிவாரண நிதியைப் பெறலாம் எனக் கருதி அதற்காக மனு கொடுக்க ஏனாநல்லூரிலிருந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தேன். பேருந்து, ரயில் ஏதும் இயங்காததால் நான் சைக்கிளிலேயே அதிகாலை 3 மணிக்குப் புறப்பட்டு மெதுவாக மிதித்துக் கொண்டு காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தேன்" என்றார்.