கரோனா பாதிப்பு புதுச்சேரியில் ஆயிரத்தைத் தாண்டியது; படுக்கைகள், வென்டிலேட்டர்களை தர மறுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்; சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா பாதிப்பு புதுச்சேயில் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. படுக்கைகள், வென்டிலேட்டர்களை சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் தர மறுக்கின்றன. இதை உறுதி செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அவர்களை அழைத்துப் பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூலை 6) கூறியதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரு நாளில் 62 நபர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 515. சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றோரின் எண்ணிக்கை 480. இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 .

மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உள்ளதால் தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளோம்.

கரோனா விஷயத்திலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குழப்பத்தை உருவாக்கி வருகிறார். தவறான தகவலை கரோனா விஷயத்தில் அவர் பரப்பக்கூடாது.

புதுச்சேரியிலுள்ள 7 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள படுக்கை வசதி, வென்டிலேட்டர் விவரங்களை முன்பே கேட்டறிந்தோம். கரோனா சிகிச்சைக்காக அரசிடம் தற்போது சில தனியார் மருத்துவமனைகள் படுக்கைகள், வென்டிலேட்டர்களைத் தர மறுக்கின்றன. அதை எழுத்துபூர்வமாக தரவில்லை. இதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரி தரப்பினரை அழைத்துப் பேச உள்ளோம். முதல்கட்டமாக 15 சதவீதம் வரையிலும் தேவையெனில் நூறு சதவீதம் வரை படுக்கைகள், வென்டிலேட்டர்களைப் பெறுவோம்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in