சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல்: ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கினார்
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட வியாபாரிகள் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், உயிரிழந்த வியாபாரி ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் மகள்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ.3 லட்சம் உதவித் தொகையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வாசன் கூறியதாவது:
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரத்தில் அநாகரிகமான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டபடியான நடவடிக்கைகள் தொடரவேண்டும்.
இந்த நடவடிக்கையின் முடிவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் ரணத்துக்கு மருந்தாக அமைய வேண்டும். விசாரணை மூலம் நியாயம் கிடைக்க வேண்டும்.
இந்த வழக்கில் விசாரணை போகும் பாதை சரியாக உள்ளது. நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற வகையில் இருப்பதால் தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படும் நிலையில் உள்ளது.
எனவே, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள், இந்த குடும்பத்துக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். இதற்கு நாங்கள் துணை நிற்போம் என்றார் அவர். கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
