

கரோனா தொற்றுள்ளதா என அறியப்படும் பிசிஆர் பரிசோதனையில் கோவையில் தனியார் ஆய்வகங்கள் இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு முறைகேடாக சோதனை செய்து தொற்று குறித்த தவறான தகவலை அளித்ததாக 4 ஆய்வகங்களுக்கு தற்காலிகத் தடை விதித்து விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவையில் நான்கு தனியார் ஆய்வகங்களுக்கு கரோனா தொற்றுப் பரிசோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் இருப்பவர்கள் மட்டும் அல்லாமல் காப்பீடு திட்டத்தில் இல்லாதவர்களுக்கும் கரோனா டெஸ்ட் எடுக்க, அவசர நிலை கருதி, பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த லேப்களில் கரோனா டெஸ்ட் எடுப்பதற்கு ஒருவருக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.4500 வரை இன்சூயூரன்ஸ் கம்பெனி வழங்குகிறது. பொதுவாக இந்த ஆய்வகங்களில் கரோனா டெஸ்ட் எடுக்க ஒரு நபருக்கு ரூபாய் 1000-க்கும் குறைவாகத்தான் செலவு ஆகும். ஒருவருக்கு நடத்தும் ஆய்விலேயே ரூ.3500 ரூபாய் லாபம் கிடைக்கும் நிலையில், மேலும் அதீத லாபத்திற்கு ஆசைப்பட்டு, 20 நபர்களின் சோதனை மாதிரிகளை ஒன்றாகச் சேர்த்து டெஸ்ட் செய்து, யாருக்கும் கரோனா இல்லை என பொய்யான மெடிக்கல் ரிப்போர்ட் இதுவரை கொடுத்து வந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த முறையில் செய்யப்படும் சோதனைகளில் ஒருவருக்கு கரோனா இருந்தால் கூட, ஒட்டுமொத்தமாக டெஸ்ட் செய்வதால், யாருக்கும் கரோனா இல்லை என்றே முடிவு வரும். அந்த வகையில் இந்த மாதிரியான அவசர சூழ்நிலையைப் பயன்படுத்தி, வெறும் லாபம் பார்ப்பதற்கு மட்டுமே பொய்யாக ஆய்வு செய்து முடிவுகளை அறிவிக்கும் தனியார் ஆய்வகங்களின் அலட்சியப் போக்கினால், கரோனா தொற்று இருப்பவரும் கூட, இல்லை என ரிப்போர்ட் பெற்று, சமூகத்தில் நடமாடுவதால், அவர்கள் மூலம், பிற மாவட்டங்களில், மேலும் பலருக்கும் தற்போது கரோனா தொற்று பரவியதற்குக் காரணமாகி இருக்கிறது என விவரம் அறிந்தவர்களால் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் அதிக அளவில் டெஸ்ட் செய்ததாக ரிப்போர்ட் கொடுத்து, இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் பணம் பெற்றதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு பல அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அவர்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை நிறுத்திவைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா சோதனையில் தனியார் ஆய்வகங்கள் செய்த இந்த முறைகேடுகளை அறிந்த சுகாதாரத் துறை, கோவையில் உள்ள சம்பந்தப்பட்ட 4 தனியார் ஆய்வகங்களை உடனடியாக தடை செய்ததோடு, மேலும் விசாரணை நடத்த குழு அமைத்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை, காப்பீட்டு நிறுவனத்துக்குக் கடிதமும் எழுதியுள்ளது.
மேலும் இது மாதிரி முறைகேடுகள் வேறு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறதா எனவும் இந்த கமிட்டி ஆராயும் என்று கூறப்படுகிறது.
நாடே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக போராடிக்கொண்டிருக்கும்போது பேரிடர் நேரத்திலும் மனிதாபிமானமற்று செயல்பட்ட 4 ஆய்வகங்கள் உடனடியாக மூடப்பட்டு அவர்களது லைசென்ஸும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுதவிர தமிழகம் முழுதும் உள்ள அனைத்து தனியார் ஆய்வகங்களையும் அவ்வப்போது ஆய்வு நடத்தி சரியாக இயங்குகிறதா என்பதைப் பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும். தற்போது 4 ஆய்வகங்களை விசாரிக்க குழு அமைத்துள்ள சுகாதாரத்துறை செயலர் மற்ற ஆய்வகங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடுவதன் மூலம் பொதுமக்களுக்கு நம்பகமான ஆய்வு முடிவுகளும், அதன் மூலம் தொற்று குறித்த உரிய தகவலும் கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.