பொதுமுடக்க உத்தரவை மீறி மதுரையில் ஓட்டுநர்கள் போராட்டம்!- அரசிடம் நிவாரணம் கேட்டு கோரிக்கை

பொதுமுடக்க உத்தரவை மீறி மதுரையில் ஓட்டுநர்கள் போராட்டம்!- அரசிடம் நிவாரணம் கேட்டு கோரிக்கை
Updated on
1 min read

தமிழ்நாடு அனைத்து ஓட்டுநர் நலச் சங்கம் சார்பில், சுமார் 100 ஓட்டுநர்கள் இன்று மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலைய வளாகத்திற்குள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது முடக்கக் காலத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்குத் தடையுள்ள நிலையில், இவ்வளவு பேர் ஓரிடத்தில் கூடியிருப்பதை அறிந்த மதுரை அண்ணாநகர் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த திடீர் போராட்டத்திற்கான காரணம் குறித்து தமிழ்நாடு அனைத்து ஓட்டுநர் நலச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தங்கப்பாண்டியிடம் கேட்டபோது, "தமிழ்நாட்டில் பொது முடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், வாகன ஓட்டுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ் ஓட்டுநர் உள்பட 56 ஆயிரம் பேர் வாகனம், வேலை இழந்து, வருமானமிழந்து வாடுகிறோம். பலர் உணவுக்கே வழியில்லாமல், குழந்தைகளுடன் தவித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு வாகன ஓட்டுநரும் மாதம் குறைந்தது ரூ.30 ஆயிரம் சம்பாதிப்பவர்கள். இப்போது குடும்பம் நடத்த முடியாமலும், கடனுக்கான தவணை செலுத்த முடியாமலும் தவிக்கிறார்கள். எனவே, குறைந்தபட்சம் அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆட்டோ தொழிலாளர்களுக்கு இருப்பதைப் போல, அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் இந்தப் போராட்டம். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in