

சென்னை ஆயுதப்படையில் முதல் சோக நிகழ்வாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆயுதப்படைக் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரோனா தொற்று பரவ ஆரம்பித்தவுடன், முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் என எண்ணற்றோர் பாதிக்கப்பட்டனர். ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 1,200 காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 420 பேர் சிகிச்சையில் நலம் பெற்று பணிக்குத் திரும்பியுள்ளனர். மூத்த மருத்துவர்கள், இளம் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
சென்னை காவல் ஆய்வாளர் பாலமுரளி கரோனா வைரஸால் உயிரிழந்தார். காவல் அதிகாரி அளவில் அதுவே முதல் மரணமாகப் பதிவானது. அதேபோன்று பட்டினப்பாக்கம் உதவி ஆய்வாளர் மணிமாறனும் உயிரிழந்தார். இந்நிலையில் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் நாகராஜன் (32). 2013-ம் ஆண்டில் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். இவர் சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். தற்போது அயல்பணியாக வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஒரு மேன்ஷனில் தங்கி வந்தார். வழக்கறிஞரின் நட்பு காரணமாக, அவரது அலுவலகத்தில் கடந்த ஒருமாத காலமாக கொண்டிசெட்டித் தெருவில் 2-ம் தளத்தில் ஜெகநாதன் என்ற சக காவலருடன் தங்கி வந்துள்ளார்.
கடந்த 3-ம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்ட நாகராஜனுக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதயப் பிரச்சனை, திடீர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை மோசமானதால், ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகராஜன் உயிரிழந்தார்.
32 வயதே ஆன நாகராஜனுக்குத் திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் உதவி ஆய்வாளர் மணிமாறனைத் தொடர்ந்து சென்னையில் கரோனாவுக்குப் பலியான காவல்துறையைச் சேர்ந்த 3-வது நபர் ஆயுதப்படைக் காவலர் நாகராஜன் (32). இவரது மறைவுக்கு போலீஸார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.