Last Updated : 06 Jul, 2020 11:39 AM

 

Published : 06 Jul 2020 11:39 AM
Last Updated : 06 Jul 2020 11:39 AM

கரோனா தொற்றைக் கண்டறியும் 'ஸ்மார்ட் ரோபோ'- கோவை பொறியாளர் வடிவமைப்பு

ஸ்வாப் உபகரணம் மூலம் சளி மாதிரி சேகரிக்கும் ரோபோ.

கோவை

கரோனா தொற்றைக் கண்டறியும் ஸ்மார்ட் ஸ்வாப் ரோபோவைக் கோவை பொறியாளர் வடிவமைத்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஒருவருக்குக் கரோனா தொற்று இருக்கிறதா? என்பது பி.சி.ஆர். கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்து உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் தாக்குதலைக் கண்டறிய மருத்துவத் துறையில் உலகளவில் நம்பகத்தன்மைக் கொண்ட பரிசோதனையாக இந்த பி.சி.ஆர். பரிசோதனை பார்க்கப்படுகிறது. காது குடைவதற்குப் பயன்படுத்தும் பட்ஸ் போன்ற தோற்றமுடைய 'ஸ்வாப்' எனப்படும் சிறிய உபகரணம் மூலமாக மூக்கு, தொண்டைப் பகுதியில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

ஆரம்பத்தில் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, மருத்துவக் குழுவினர் ஸ்வாப் மூலமாக சளி மாதிரி சேகரித்து, சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர், முகவரி, தொடர்பு உள்ளிட்ட விவரங்களுடன் ஆய்வகங்களுக்கு அனுப்பி வந்தனர். தொற்று அதிகரித்து வருவது மருத்துவக் குழுவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஸ்மார்ட் ஸ்வாப் ரோபோ'
இதையடுத்து தற்போது மருத்துவக்குழுவினர் கேபினுக்குள் இருந்தவாறு, கையுறைகள் அணிந்து கொண்டு வெளியில் உள்ள நோயாளிகளுக்கு 'ஸ்வாப் டெஸ்ட்' எடுத்து வருகின்றனர். இதுபோன்ற தொற்றுப் பரவி வரும் காலக்கட்டத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினர் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

சிலர் தொற்று ஏற்பட்டு, தீவிர சிகிச்சையின் மூலம் மீண்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும், பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் மருத்துவக் குழுவினருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம். மேலைநாடுகளில் கரோனா பரிசோதனை மற்றும் கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் 'ரோபோ'க்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில், கோவையைச் சேர்ந்த பொறியாளர் கார்த்திக் வேலாயுதம், கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி சேரிக்கும் 'ஸ்மார்ட் ஸ்வாப் ரோபோ'வை உருவாக்கியுள்ளார்.

இவரது சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடி. கோவை, கிணத்துக்கடவில் உள்ள ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்க வந்த இவர், வேலைவாய்ப்புக்காக, கோவையிலேயே குடியேறிவிட்டார். தற்போது, வேடப்பட்டி பகுதியில் தாய், மனைவியுடன் வசித்து வருகிறார். புதிய செயலிகளை வடிமைக்கும் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அவரிடம் பேசினோம்.

ரோபோ, கார்த்திக் வேலாயுதம்

கரோனா பரிசோதனை
“கரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்தும் வகையிலான மாதிரி ரோபோ இதுவாகும். நாம் எப்படிப் பரிசோதனைக்காக மருத்துவருக்கு முன்பு சென்று அமர்வோமோ, அதேபோல் இந்த ரோபா வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டோமேயானால், ரோபாவானது ஸ்வாப் உபகரணத்தை மூக்கு துவாரத்துக்குள் மெதுவாகச் செலுத்தி சளியை சேகரிக்கும். அதன்பின்னர் அதைப் பாதுகாப்பாகக் குடுவைக்குள் வைத்துவிடும். பின்னர் மருத்துவக்குழுவினர் அதன் மேல் பரிசோதனை செய்து கொண்டவரிடன் விவரங்களை குறித்து ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். 'ஸ்வாப்' பரிசோதனை செய்யும் போது சிலருக்கு மூக்கில் ரத்தம் வருகிறது.

புதிய செயலி
தும்மல் வந்தால் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய பின்னரே, மருத்துவக் குழுவினர் ஸ்வாப் உபகரணத்தை மூக்கினுள் செலுத்துகின்றனர். அப்போது கட்டுப்படுத்த முடியாமல் தும்மல் வந்தாலோ, அந்த நபருக்கு ஒருவேளை கரோனா வைரஸ் தொற்று இருந்தால் பரிசோதனை செய்யும் மருத்துவருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இச்சூழலில் இதுபோன்ற பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினரையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, இந்த ரோபோ உதவும் என்று நம்புகிறேன். இந்த ரோபாவை ஆண்ட்ராய்டு செல்போன் மூலமாக இயக்குவதற்கு 'கோவிட்-19 ஸ்மார்ட் ஸ்வாப்' என்ற செயலியை உருவாக்கியுள்ளேன்.

குறைந்த விலையில் தயாரிப்பு
கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து, முழு பயன்பாட்டுடன் கூடிய ரோபோக்களை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மிகக் குறைந்த விலையில் வாங்கும் திறனுக்கு ஏற்ப ரோபோக்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

'ஸ்வாப்' உபகரணம் மூலமாக சளி சேகரிக்கும் போது சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது. இதனால் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தால் போதும் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். மருத்துவ நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து, இந்த ரோபோவை அங்கீகரித்தால், தமிழக அரசுக்குத் தேவையான ரோபோக்களை தயாரித்து எங்களால் வழங்க முடியும்” என்றார், கார்த்திக் வேலாயுதம் நம்பிக்கையுடன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x