

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
உதவி ஆய்வாளர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது, புகார் மனுக்களை விசாரிக்கும் முறை, காவல் நிலைய ஆவணங்களை எவ்வாறு பராமரிப்பது, காவல் நிலையப் பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்வது, குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைப்பிடிப்பது போன்ற அறிவுரைகளை டிஐஜி மற்றும் எஸ்.பி. ஆகியோர் எடுத்துரைத்தனர்.
மேலும் உதவி ஆய்வாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். காவல் துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய அவர்கள், பொது மக்களிடம் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.