வாகன ஆவணம் கேட்டு இளைஞரை தாக்கியதாக புகார்; சங்கரன்கோவில் காவல் ஆய்வாளர் உட்பட 6 போலீஸார் மீது வழக்குப் பதிய வேண்டும்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

வாகன ஆவணம் கேட்டு இளைஞரை தாக்கியதாக புகார்; சங்கரன்கோவில் காவல் ஆய்வாளர் உட்பட 6 போலீஸார் மீது வழக்குப் பதிய வேண்டும்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
Updated on
1 min read

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரிடம் வாகன ஆவணம் கேட்டு தாக்கியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக சங்கரன்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட 6 போலீஸார் மீது வேறொரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சங்கரன்கோவில் மலை யான்குளத்தைச் சேர்ந்த தங்கத்துரை(27), உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

சங்கரன்கோவில் டவுன் காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன், காவலர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் 22.9.2019-ல் மோட்டார் சைக்கிளில் சென்ற என்னை ஆவணங்களைக் கேட்டுத் தாக்கினர். காவல்நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் சத்தியபிரபா, உதவி ஆய்வாளர் அன்னலெட்சுமி ஆகியோர் தாக்கினர்.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் சத்தியபிரபா உட்பட 6 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் 24.1.2020-ல் உத்தரவிட்டார். இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. சங்கரன்கோவில் காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும், அந்த வழக்கை டிஎஸ்பி விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட் டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடுகையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது அதே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் புகாரைப் பதிவு செய்ய மறுக்கின்றனர் என்று தெரிவித்தனர். இதையடுத்து, மனுதாரரின் புகார் தொடர்பாக வேறொரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி விசாரிக்க தென்காசி எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in