Published : 06 Jul 2020 07:46 AM
Last Updated : 06 Jul 2020 07:46 AM

நாகை அக்கரைப்பேட்டையில் மீன் வாங்குவதற்காக சமூக இடைவெளியின்றி திரண்ட மக்கள்: விதி மீறி வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கு

முழு ஊரடங்கு நேற்று அமலில் இருந்த நிலையில், திருச்சி நீதிமன்றம் அருகே வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரிக்கும் போலீஸார். படம்: ஜி.ஞானவேல்முருகன்

நாகப்பட்டினம்/ திருச்சி

அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் அதிக அளவில் நேற்று திரண்டு வந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.

கடலில் மீன்வளத்தை பாது காக்கும் வகையில் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்களின் நலன் கருதி, ஜூன் 15-ம் தேதியுடன் முடிவடைய வேண்டிய தடைக்காலத்தை மத்திய அரசு நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடைவதாக அறிவித்தது.

ஆனால், கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் மீன்கள் ஏற்றுமதிக்கு வாய்ப்பு இல்லாததால் நாகை மாவட்ட மீனவர்கள் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதை தவிர்த்தனர். இந்நிலையில், நாகை தாலுகா மீனவ கிராம பஞ்சாயத்தாரின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி, விசைப் படகு மீனவர்கள் கடந்த ஜூன் 22-ம் தேதி அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லத் தொடங்கினர்.

கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். 40 விசைப் படகுகளில் இருந்த மீன்கள் மட்டும் அக்கரைப்பேட்டை மீன் இறங்குதளத்தில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டன. வழக்கத்தை விட நேற்று அதிகளவில் மீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீன்களை சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், வியாபாரிகளும், பொதுமக்களும் விதிமுறைகளை மீறி மீன்களை வாங்க திரண்டனர். வெகு சிலரே முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். மேலும், சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை. இதனால், நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

விதி மீறியவர்கள் மீது வழக்கு

தளர்வுகள் ஏதுமில்லாத முழு ஊரடங்கு நேற்று அமலில் இருந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மத்திய மண்டல மாவட்டங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் வீதி கள் வெறிச்சோடின. எனினும், ஆதர வற்றோருக்கு உணவு வழங்கும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டன. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் இயங்கின. முக்கிய சந்திப்புகள், சாலைகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் வெளியே வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x