

சென்னையில் 1,100 தெருக்களில் கரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம் பகுதியில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்றுஆய்வு செய்தனர். பின்னர் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் 39,537 தெருக்கள் உள்ளன. இவற்றில் கடந்த ஜூன் 3-ம் தேதி நிலவரப்படி 9,509 தெருக்களில் வைரஸ் தொற்று இருந்தது. மாநகராட்சி நடத்தி வரும் காய்ச்சல் பரிசோதனை முகாம், பரிசோதனைஎண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக இந்த எண்ணிக்கை 8,400 ஆகக்குறைந்துள்ளது. 1,100 தெருக்களில் கரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலமாக தினமும் 37 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்படுகின்றனர். இதே நடைமுறைகளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும்போது, "ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை உள்ளிட்டவற்றை முடித்து, சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப சுமார் 3 முதல் 4 மணி நேரம் ஆகிறது. இதை குறைக்க, ஒவ்வொரு வார்டுக்கும் தலா 1 வாகனம் வீதம் 200 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.