Published : 05 Jul 2020 07:55 PM
Last Updated : 05 Jul 2020 07:55 PM

பிரண்ட்ஸ் ஆப் போலீஸை நிரந்தரமாக தடை செய்க: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை

பிரண்ட்ஸ் ஆப் போலீஸை நிரந்தரமாக தடை செய்திட வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழகத்தில் கரோனா காலம் என்பது காவல்துறையின் அராஜக சாம்ராஜ்யமாக மாறி வருகிறது. தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தக்கூடிய வேலையை மேற்கொண்டு வருவதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.

காவல்துறையில் நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் காவல்துறையின் செயல்பாட்டைப் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே காவல்துறை அத்துமீறும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் ஊடகங்கள் வழியாக பார்க்க முடிகிறது. இதுபோன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கான முயற்சியில் காவல்துறை ஈடுபடுவதில்லை அல்லது தடுப்பதற்கான கவனத்தை செலுத்துவது இல்லை என்பதை இதுபோன்ற சம்பவங்களின் மூலமாக அறிய முடிகிறது.

தென்காசியில் ஆட்டோ டிரைவரை அடித்துப் படுகொலை செய்துள்ளனர். இப்படி மெல்ல மெல்ல தமிழக மக்களை கடும் அடக்குமுறைக்கு உள்ளாக்கிக் கொல்கின்ற வேலையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வது என பல செய்திகளை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் காவல்துறையின் நண்பர்கள் (friends of police) என்ற பெயரில் ஒரு குழுவினர் இவர்களோடு இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

அவ்வூரில் உள்ள குற்றங்களைப் பற்றி துப்பு கொடுப்பதில் தொடங்கி வாகன சோதனை, வாகன பறிமுதல், கைது செய்வது என்று ஆரம்பித்து போலீஸுக்கு தொண்டூழியம் செய்வது, சித்திரவதை செய்வது, வாகன ஓட்டிகள் கடைக்காரர்களிடம் மிரட்டி காசு பறிப்பது என வளர்ந்திருக்கிறார்கள் என்றால் எல்லாம் தரமற்ற தமிழக போலீஸின் பயிற்சிதான் காரணமாகும்.

சாத்தான்குளம் படுகொலைகளில் கூட போலீஸ் நண்பர்கள் குழுவிற்கும் பங்குள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒருபுறம் உரிய வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களை தன்னோடு எந்த சட்ட வரையறையும் இல்லாமல் இணைத்துக்கொண்டு காவல்துறை செய்யக்கூடிய அட்டூழியங்களுக்கு இத்தகைய இளைஞர்களும் பலிகடாவாக மாற்றப்படுகின்றனர். காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகளை காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில் வேலையில்லாத இளைஞர்களைப் பயன்படுத்தி மேற்கொள்கின்றனர்.

இந்த வகையில் வேலையில்லாத இளைஞர்களின் உழைப்பை நவீனமுறையில் சுரண்டுகின்றனர். இந்த காவல்துறை நண்பர்கள் குழுவில் இணைந்தால் எதிர்காலத்தில் காவல்துறையில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நப்பாசையில் இளைஞர்களும் காவல்துறையின் சூழ்ச்சி வலையில் விழுகின்றனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளில் செயல்படுபவர்களும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் தங்களை காவல்துறை நண்பர்கள் குழுவில் தங்களை இணைத்துக்கொண்டு தவறான முறையில் ஆதாயம் பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட இந்தக் குழுவினர் காவல்துறையினரின் அடியாட்கள் போல பயன்படுத்தப்படுகின்றனர்.

இதுபோன்ற அமைப்புகளுக்கு எந்த சட்ட வரையறையும் இல்லாமல், காவல்துறையின் விருப்பப்படி காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில் இணைத்து செயல்படுவது என்பது இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை செய்ய வேண்டும் என (ஜூலை 4) நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

அதையொட்டி, தற்சமயம் தற்காலிகமாக இரண்டு மாதங்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸைப் பயன்படுத்தவேண்டாமென தமிழக காவல் துறை டிஜிபி அறிவரை வழங்கி இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது ஓரு கண்துடைப்பு நடவடிக்கையாகும். தமிழகத்தில் நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது அவசியமாகும்.

எனவே, பிரண்ட்ஸ் ஆப் போலீஸை நிரந்தரமாக தடை செய்திட வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை (ஜூலை 6 ஆம் தேதி) தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x