

கோவில்பட்டி தினசரிச் சந்தை வியாபாரிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 18 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கோவில்பட்டியில் செயல்படும் நகராட்சி தினசரி தற்காலிகச் சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதேபோல், மார்க்கெட் ரோட்டிலுள்ள நகராட்சி தினசரிச் சந்தையில் இயங்கும் மளிகைக் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2-ம் தேதி சளி மாதிரி எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில் 4 பெண்கள் உட்பட 18 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 13 பேர் தினசரிச் சந்தையில் பணியாற்றுபவர்கள். ஏற்கெனவே நேற்று முழு ஊரடங்கு என்பதால் தினசரிச் சந்தை அடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் சந்தை முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கோவில்பட்டி நகராட்சி தினசரிச் சந்தை இன்று (6-ம் தேதி) முதல் ஜூலை 12-ம் தேதி வரை மூடப்படும் என நகராட்சி ஆணையர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.