

‘கரோனா’பரிசோதனை செய்வோர் நோய்த்தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தங்கள் இணையதளத்தில் தெரிந்துகொள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது.
மதுரையில் ‘கரோனா’ தொற்று நோய் வேகமாகப் பரவுகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகமும், மாநராட்சி நிர்வாகமும் திணறுகின்றன. ஆனால், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த காலத்தை விட மிக விரைவாக குணமாகுவதால் மக்கள் பதற்றமில்லாமல் உள்ளனர். தீவிர பாதிப்புள்ள நோயாளிகள் மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் மற்ற ‘கரோனா’ சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். நோய் அறிகுறி இல்லாத மற்றும் தீவிர பாதிப்பு இல்லாத மற்ற நோயாளிகள் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் ‘கரோனா’ பரிசோதனை செய்வோருக்கு உடனுக்குடன் அவர்கள் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 3 வாரத்திற்கு முன் வரை மதுரை மாவட்டத்தில் 250 முதல் 300 பேர் வரை மட்டுமே தினமும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் 2 நாளில் தெரிவிக்கப்பட்ட இந்த முடிவுகள் தற்போது 4 நாட்களாகிவிடுகிறது. மிகத் தாமதமாக தெரிவிப்பதால் தொற்று இருக்கிறவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்த தொற்றுநோய் எளிதாக பரப்பிவிடுகிறது. பரிசோதனை செய்தவர்களும், முடிவு தெரியும் வரை பதற்றத்துடன் வீடுகளில் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிய உள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 பேர் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிய மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணையத்தில் வசதி ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டீன் சங்குமணி கூறியதாவது;
''பரிசோதனை முடிவுகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவக்கல்லூரி நூலகம் அருகே நேரில் பெற்றுக் கொள்வதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேரில் வர முடியாதவர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. தற்போது இணையதளத்தில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகளை அறிய http:/www.mdmc.ac.in/mdmc/ என்ற இணையதளத்தில் பரிசோதனைக்கான மாதிரிகளைக் கொடுத்தவர்கள் தனது பெயர், வயது மற்றும் தொலைபேசி எண்ணின் கடைசி 5 இலக்க எண்களை பூர்த்தி செய்து முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம். ஒருவரின் பரிசோதனை முடிவு வெளி வந்தபின் ஏழு நாட்கள் மட்டுமே வலைதளத்தில் இருக்கும்''.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.