Published : 05 Jul 2020 05:38 PM
Last Updated : 05 Jul 2020 05:38 PM

விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகள் மூடப்படும்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை குனியமுத்தூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி.

கோவை

கோவையில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரித்துள்ளார்.

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடையர் வீதி, சாவித்ரி நகர், திருமூர்த்தி நகர், திருநாவுக்கரசு நகர், மில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 5) மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து ஆட்சியர் ராசாமணி கூறும்போது, "மாவட்டத்தில் 27 மாநகரப் பகுதிகளும், 3 ஊரகப் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல் போன்றவற்றைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, புதிய தொற்று ஏற்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, அனுமதி பெறாமல் மாவட்டத்தில் நுழைந்தது மட்டுமின்றி, தனக்குத் தொற்று இருப்பதை அறியாமல், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார். பின்னர் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரால் 40-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல, பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றிய சிலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அந்நிறுவனம் மூட உத்தரவிடப்பட்டது. இந்தக் கடையின் பணியாளர்கள், கடைக்குச் சென்றவர்கள் என 45 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடைக்குச் சென்ற அனைவரும் தாமாகவே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் அறிவுரைகளைப் பின்பற்றாமல், வைரஸ் தொற்று ஏற்படும் வகையில் செயல்படும் கடைகள், நிறுவனங்கள் மீதும், அவற்றின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், கடைகளை உடனடியாக மூடி, முத்திரையிடுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x