Last Updated : 05 Jul, 2020 04:54 PM

 

Published : 05 Jul 2020 04:54 PM
Last Updated : 05 Jul 2020 04:54 PM

மத்திய உள்துறையின் காலதாமதத்தால் உடனடியாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

மத்திய உள்துறையின் காலதாமதத்தால் உடனடியாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 5) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு கட்டுப்பாட்டு மையங்களை மிகக் கடுமையாகக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்துள்ளோம். முத்தியால்பேட்டை, முத்திரையர்பாளையம், திருக்கனூர் ஆகிய மூன்று பகுதிகளில் அதிகமாக கரோனா தொற்று உள்ளது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே நடமாடாமல் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உணவு சரியில்லை, மருத்துவம் சரியாகப் பார்ப்பதில்லை எனப் பலவித வதந்திகளை ஒருசிலர் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவர்கள், செவிலியர்களையும் கலந்தாலோசித்துவிட்டு வந்தார்.

மருத்துவக் கல்லூரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் பேசும்போது, அவர்கள் சிறப்பான மருத்துவம் அளிக்கப்படுகிறது, தரமான உணவு கொடுக்கப்படுகிறது என்று கூறினார்கள். உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் மக்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவும், நோயாளிகள் மத்தியில் பீதியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், ஒருசிலர் தவறான தகவல்களைப் பரப்பும் விஷம வேலையைச் செய்து வருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் ஏன் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என்று ஒருசிலர் கேள்வி கேட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கரோனா பரவாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தரமான உணவை உண்ண வேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்லக் கூடாது என நான் வலியுறுத்தி வருகிறேன். இதனைப் பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பதில்லை.

மத்திய அரசு கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க பல நிறுவனங்களை ஈடுபடுத்தியுள்ளது. இப்பொழுது 'கோவிட் 19 வாக்சின்' என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை மத்திய அரசின் உத்தரவோடு, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பொது நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்தை இப்போது மனிதர்களுக்குக் கொடுக்க இந்திய மருத்துவக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அந்த மருந்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்து கரோனாவைத் தடுத்து நிறுத்தவும், கரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், பல மருத்துவ நிபுணர்களின் கருத்து இந்த மருந்தை சுமார் 6 அல்லது 9 மாதங்கள் பரிசோதனை செய்த பின்னரே பொதுமக்கள் மத்தியில் கொண்டு வர முடியும். குறுகிய காலத்தில் செய்வது என்பது முடியாது என்று கூறியுள்ளனர்.

இது மிகப்பெரிய சர்ச்சையைாக உருவாகி இருக்கிறது. இந்த மருந்து மூலம் முழுமையாக கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட முடியும் என்றால், கவனத்தோடு வெளிமார்க்கெட்டில் கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொடுக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் பட்ஜெட் போடுவதற்கான கோப்பைத் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பினோம். இப்போது அந்தக் கோப்பு மத்திய உள்துறைச் செயலாளரின் ஒப்புதல் முடிந்து, உள்துறை அமைச்சரிடம் சென்றிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளிப்பார். அதற்குப் பிறகு சட்டப்பேரவையைக் கூட்டி புதுச்சேரி மாநில 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எங்கள் அரசு எடுத்தது. ஏப்ரல் மாதத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடிவு செய்து, பிப்ரவரி மாதத்தில் இருந்து அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுத்தோம். அதற்கான கோப்புகளைத் தயார் செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பினோம். ஆனால் அவர் பல கேள்விகளைக் கேட்டு அதனைத் திருப்பி அனுப்பி காலதாமதப்படுத்தினார்.

அதன் பிறகு நிதிச்செயலருடன் பேசி தேவையான நிதி மற்றும் மக்களுக்கு என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்து கோப்புகள் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். மத்திய அரசில் இருந்தும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கும் பதில் அனுப்பியுள்ளோம். இப்பொழுது அது முழுமையான வடிவம் பெற்று மத்திய உள்துறை அமைச்சரின் கையெழுத்துக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது.

இது புதுச்சேரி அமைச்சரவையின் காலதாமதம் அல்ல. மத்திய உள்துறையில் இருந்து அதற்குக் கிடைக்க வேண்டிய ஒப்புதல் காலதாமதம் ஆவதால்தான் உடனடியாக பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் பட்ஜெட்டை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். புதுச்சேரி மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய 4 மாதத்துக்கான ஜிஎஸ்டி, மானிய நிதி, 7-வது சம்பள கமிஷன் நிதி, தேவையான நிதி ஆதாரம், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கான நிதி ஆகியவற்றை உடனடியாகக் கொடுக்க வேண்டும்.

5 சதவீதத் தொகையைக் கடன் பெறலாம் என்று மத்திய அரசு கொடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு கண்டிப்பாக மத்திய அரசு நமக்குக் கிடைக்க வேண்டிய நிதியைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x